ஈரோட்டில் 4–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்
4–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான மஞ்சள், ஜவுளி தேக்கம் அடைந்தது.
ஈரோடு,
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கடந்த மாதம் 30–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களில் லாரிகள் ஓடவில்லை. ஈரோடு மாவட்டத்திலும் 4–வது நாளாக நேற்றும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது.
பொருட்கள் தேக்கம்ஈரோடு அருகே நரிப்பள்ளம் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. டிரைவர்களும், கிளீனர்களும் லாரிகளிலேயே சமையல் செய்து சாப்பிட்டும், படுத்து ஓய்வு எடுத்தும் வருகிறார்கள். 4 நாட்களாகியும் போராட்டம் வாபஸ் ஆகாததால் ஒரு சில டிரைவர்கள் லாரிகளை நரிப்பள்ளத்திலேயே நிறுத்திவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
லாரிகள் ஓடாததால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி ஜவுளி, மஞ்சள், இரும்பு வகைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்து வகையான பொருட்களின் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் இருந்து மஞ்சள், ஜவுளி, எண்ணெய் வகைகள் அதிகமாக வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலமாக அனுப்பப்படுகிறது. இதனால் இந்த பொருட்கள் முழுமையாக தேக்கம் அடைந்து கிடக்கிறது. லாரி புக்கிங் அலுவலகங்களில் பண்டல் பண்டல்களாக பொருட்கள் தேங்கியுள்ளது. அங்கு பணியாற்றி வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் வேலை இல்லாமல் இருப்பதை காண முடிந்தது.
ரூ.50 கோடிஇதுகுறித்து ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி கூறும்போது, ‘‘காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான ஜவுளி, மஞ்சள் ஆகியன தேக்கம் அடைந்து உள்ளன. மேலும், காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்து உள்ளனர். எனவே கியாஸ் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே லாரி உரிமையாளர்களுடன் அரசு அதிகாரிகள் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.