ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 2 April 2017 10:30 PM GMT (Updated: 2 April 2017 6:38 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 1,289 மையங்கள் மூலம் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

ஈரோடு,

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். ஈரோடு எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறியதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1,087 மையங்களும், நகர்புறங்களில் 202 மையங்களும் என மொத்தம் 1,289 போலியோ சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மையங்கள் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரத்து 89 குழந்தைகள் மலைப்பகுதியில் உள்ளனர். இவர்களுக்கு 104 மையங்களிலும், 6 நடமாடும் மையங்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.

போலியோ சொட்டு மருந்து

வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 751 குழந்தைகளுக்கு 30 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 62 மையங்கள் மற்றும் 23 நடமாடும் மையங்கள் சிறப்பு முகாம்களாக அமைக்கப்பட்டன.

5,234 பணியாளர்கள்

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5 ஆயிரத்து 234 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணிகளுக்கு 97 அரசு துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின் விளைவுகளும் ஏற்படாது. போலியோ சொட்டு மருந்து முகாம் 2–ம் தவணையானது வருகிற 30–ந் தேதி அன்று நடைபெற உள்ளது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் த.கனகாசலகுமார், துணை இயக்குனர் பெ.பாலுசாமி, உறைவிட மருத்துவ அதிகாரி அரங்கநாயகி, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் லட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோபி–அந்தியூர்

இதேபோல் கோபி நகராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்த முகாமை ஆணையாளர் பழனிவேலு தொடங்கி வைத்தார். மொத்தம் 17 மையங்களில் 5 ஆயிரத்து 795 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இதேபோல் அந்தியூர் பகுதியில் பஸ் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அத்தாணி, அந்தியூர் பேரூராட்சி அலுவலகங்கள் உள்பட 100 மையங்களில் 12 ஆயிரத்து 121 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், கிருபைநாதன், கைலாசம் மற்றும் கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 400–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் நேற்று காலை 7 மணிக்கு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர் மலைச்சாமி, ஆனைக்கொம்பு ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சத்தியமங்கலம் தாய் சேய் நல விடுதி, நகராட்சி தொடக்கப்பள்ளிகள், பஸ் நிலையம், சத்துணவுக்கூடங்கள் என 20 மையங்களில் 4 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 1,289 மையங்கள் மூலம் 2 லட்சத்து 521 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.


Next Story