12 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது: கரடிக்கல் ஜல்லிக்கட்டில் 343 காளைகள் சீறிப் பாய்ந்தன


12 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது: கரடிக்கல் ஜல்லிக்கட்டில் 343 காளைகள் சீறிப் பாய்ந்தன
x
தினத்தந்தி 3 April 2017 4:30 AM IST (Updated: 3 April 2017 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கரடிக்கல் கிராமத்தில் சுந்தர ராஜ பெருமாள் கோவில் உள்ளது.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கரடிக்கல் கிராமத்தில் சுந்தர ராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கோவில் விழா 2 நாட்கள் நடைபெறும். அதில் 2–ம் நாள் நிகழ்ச்சியாக ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த 12 வருடங்களாக பல்வேறு காரணங்களால் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியதை தொடர்ந்து, கரடிக்கல் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காலை 9 மணிக்கு கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் 700 மாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின் காளைகள், ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன. இதனை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடனும், ஆக்ரோ‌ஷத்துடனும் அடக்கினர். மாலை 4 மணி வரை நடந்த இந்த ஜல்லிக்கட்டில் 343 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

478 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். மாடு பிடி வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், சைக்கிள், பிரோ, பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் விஜய்(வயது 35), மணிகண்டன் (22), சுந்தர் (26) உள்பட 46 பேர் காயம் அடைந்தனர்.


Next Story