மசினகுடி வனப்பகுதியில் மேலும் ஒரு யானை சாவு


மசினகுடி வனப்பகுதியில் மேலும் ஒரு யானை சாவு
x
தினத்தந்தி 3 April 2017 4:00 AM IST (Updated: 3 April 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடி வனப்பகுதியில் மேலும் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது.

மசினகுடி

நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்டது மசினகுடி சீகூர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த ஆண்டு குளு, குளு மாவட்டமான நீலகிரியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் விலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை சீகூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஒடகரப்பட்டியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலை வனத்துறை ஊழியர்கள் வனச்சரகர் ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வனஅலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில், நேற்று முதுமலை கால்நடை டாக்டர் விஜயராகவன் யானைக்கு பிரேத பரிசோதனை செய்தார்.

யானை சாவு

இதில் இறந்த அந்த யானைக்கு 6 வயது இருக்கும் என்றும், கடும் வயிற்று போக்கு ஏற்பட்டு யானை இறந்திருப்பது தெரியவந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் அதன் உடற்கூறு பாகங்கள் சேகரிக்கப்பட்டு ரசாயன பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே முதுநிலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் நேற்று மாலை ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் மேலும் ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்தனர்.

யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இந்த யானையின் உடல் இன்று (திங்கட்கிழமை) பிரேத பரிசோனை செய்யப் படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 

Next Story