நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
நீலகிரி மாவட்டத்தில் நேற்று 43 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சங்கர் தெரிவித்தார்.
ஊட்டி,
மத்திய அரசு இளம்பிள்ளை வாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலியோ சொட்டு மருந்தை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு முதல் கட்டமாக நேற்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த சொட்டு மருந்து வழங்கும் பணியினை கலெக்டர் சங்கர் ஊட்டி தாவரவியல் பூங்கா அருகில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தொடங்கி வைத்தார். அப்போது சுற்றுலா பயணிகளின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி கூறியதாவது:–
வழிபாட்டு தலங்கள்பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கலாம். நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வசதியாக ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரெயில் நிலையம், மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதுதவிர 29 கோவில்கள், 52 கிறிஸ்தவ ஆலயங்கள், 6 மசூதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 770 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் மூலம் 43 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் சுகதார துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.