குன்னூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில் ரேலியா அணையின் நீர்மட்டம் குறைந்தது


குன்னூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில் ரேலியா அணையின் நீர்மட்டம் குறைந்தது
x
தினத்தந்தி 3 April 2017 4:15 AM IST (Updated: 3 April 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக ரேலியா அணையின் நீர்மட்டம் 32 அடியாக குறைந்தது.

குன்னூர்,

குன்னூர் நகரில் உள்ள 30 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ள இந்த அணை நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பதால் அந்த காலக்கட்டத்தில் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப 43.7 என்று கணக்கீடப்பட்டு ரேலியா அணை கட்டப்பட்டது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தால் அணையின் தண்ணீர் பற்றாக்குறையாக மாறி போனது.

இதனால் நகராட்சி நிர்வாகம் மூலம் பல்வேறு குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தநிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததன் காரணமாக அணையில் இருந்த நீர் முற்றிலுமாக வற்றி விட்டது. இதனால் நகராட்சி நிர்வாகம் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்தது.

நீர்மட்டம் குறைந்தது

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்திலும், 2–வது வாரத்திலும் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்கனவே அணையில் இருந்த தண்ணீருடன், மழையின் காரணமாக பெருக்கெடுத்து நீரினாலும் அணையின் நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்தது. இந்த மாதத்தின் 2–வது வாரத்தில் இருந்து முதல் சீசன் தொடங்குவதால் அணையில் இருக்கும் தண்ணீரை திறந்து விடலாம் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டு இந்த தண்ணீர் சேமிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 10 மணி வரை பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதுமட்டுமின்றி கோடை வெயில் சுட்டெரிக்கிறது.

கோரிக்கை

இதன்காரணமாக நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் ஆவியாகி வருகிறது. ரேலியா அணையிலும் பலத்த காற்றும், வெயிலும் அடித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 2 அடி குறைந்து 32 அடியாக உள்ளது. ரேலியா அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்நிலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரை இப்போதே ஆவியாகாமல் தடுக்க பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story