விடுதிக்குள் புகுந்து மாணவிகளின் அறைகளை எட்டிப்பார்க்கும் மர்மநபர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பிடிக்க நடவடிக்கை


விடுதிக்குள் புகுந்து மாணவிகளின் அறைகளை எட்டிப்பார்க்கும் மர்மநபர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பிடிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 3 April 2017 2:30 AM IST (Updated: 3 April 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் டவுனில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதிக்குள் புகுந்து, மாணவிகளின் அறையை எட்டிப்பார்க்கும் மர்மநபரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சிக்கமகளூரு,

ஹாசன் டவுனில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதிக்குள் புகுந்து, மாணவிகளின் அறையை எட்டிப்பார்க்கும் மர்மநபரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கால்நடை மருத்துவக்கல்லூரி

ஹாசன் டவுனில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ– மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரிக்கு அருகிலேயே மாணவிகளுக்கான தங்கும் விடுதி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நள்ளிரவில் யாரோ மர்மநபர் கல்லூரி விடுதிக்குள் புகுந்து, மாணவிகள் தங்கியிருக்கும் அறையை எட்டிப்பார்த்து தொல்லை கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து மாணவிகள் கல்லூரியின் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து விடுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன.

தப்பி ஓட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் விடுதிக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் மாணவிகள் தங்கியிருக்கும் அறையை எட்டிப்பார்த்து உள்ளார். இதனை பார்த்த ஒரு மாணவி அதிர்ச்சி அடைந்த கூச்சலிட்டு உள்ளார். மாணவியின் கூச்சல் சத்தத்தை கேட்டு சக மாணவிகள் எழுந்து பார்த்தனர்.

அப்போது ஒரு மர்மநபர் கல்லூரியின் சுற்றுச்சுவரின் அருகே நின்று கொண்டு இருந்தார். இதனால் மற்ற மாணவிகளும் அலறினர். இதனையடுத்து சுற்றுச்சுவரின் அருகே நின்று கொண்டு இருந்த அந்த மர்மநபரை காவலாளி பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹாசன் டவுன் போலீசார், மாணவிகள் தங்கும் விடுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் நள்ளிரவில் கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து உள்ளே வந்து மாணவிகள் அறைகளை எட்டிப்பார்க்கும் காட்சிகளும், ஒரு மாணவி கூச்சலிட்டதும் அந்த மர்மநபர் கல்லூரி சுற்றுச்சுவர் அருகே நிற்கும் காட்சிகளும், காவலாளி பிடிக்க வந்ததும் அந்த மர்மநபர் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய காட்சிகளும் கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர்.

இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று கன்னட தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில்...

ஏற்கனவே பெங்களூரு சேஷாத்திரி ரோட்டில் மகாராணி அரசு பெண்கள் கல்லூரி தங்கும் விடுதிக்குள் இரவு நேரங்களில் புகுந்த ‘சைக்கோ‘ வாலிபர் ஒருவர், மாணவிகள் தங்கியிருக்கும் அறைகளின் உள்ளே எட்டிப்பார்த்து மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து வந்தார். மேலும் மாணவிகளின் உள்ளாடைகளையும் திருடி அணிந்து சுற்றித்திரிந்து வந்தார். இதுகுறித்து கல்லூரியின் நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகார் மாநிலத்தை சேர்ந்த அபுதலீம் என்ற வாலிபரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்த நிலையில், ஹாசனில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதிக்குள் புகுந்து மாணவிகளின் அறைகளை மர்மநபர் எட்டிபார்த்து தொல்லை கொடுத்து வரும் சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story