ராணிபென்னூர் அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உயிருடன் எரித்துக்கொலை விவசாயி கைது


ராணிபென்னூர் அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உயிருடன் எரித்துக்கொலை விவசாயி கைது
x
தினத்தந்தி 3 April 2017 1:00 AM IST (Updated: 3 April 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

ராணிபென்னூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை உயிருடன் எரித்துக்கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி,

ராணிபென்னூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை உயிருடன் எரித்துக்கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

நடத்தையில் சந்தேகம்

ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா மாகனூர் பகுதியை சேர்ந்தவர் பசப்பா (வயது 40). விவசாயி. இவருடைய மனைவி நாகம்மா(35). இந்த தம்பதிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் பசப்பா தினமும் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்து நாகம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து, உதைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பசப்பா, நாகம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்ததாக தெரிகிறது.

எரித்துக்கொலை

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த பசப்பா, மண்எண்ணெயை எடுத்து நாகம்மாவின் மீது ஊற்றி தீவைத்து கொளுத்தினார். இதில் நாகம்மாவின் உடல் முழுவதும் தீ மளமளவென வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வலிதாங்க முடியாமல் நாகம்மா அலறி துடித்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பசப்பா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நாகம்மாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக, ராணிபென்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நாகம்மா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறிந்த ராணிபென்னூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டு நாகம்மாவை, பசப்பா மண்எண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துக்கொன்றது தெரியவந்தது.

கைது

இதைதொடர்ந்து பசப்பாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை, கணவனே உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story