பொள்ளாச்சி வட்டார பகுதியில் 57 ஆயிரத்து 483 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
பொள்ளாச்சி வட்டார பகுதியில் 57 ஆயிரத்து 483 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி,
இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிக்க நாடு முழுவதும் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் மொத்தம் 27 மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நாச்சிமுத்து பிரசவ விடுதியில் சொட்டு மருந்து வழங்கும் முகாமை நகர்நல அதிகாரி ராஜ்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொள்ளாச்சி பஸ் நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், சத்துணவு மையங்கள், சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி ஒரு நடமாடும் வாகனம் மூலமும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. மொத்தம் 8 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
வடக்கு ஒன்றியம்பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 77 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. கஞ்சம்பட்டி அங்கன்வாடியில் டாக்டர் சகுந்தலா தேவி முகாமை தொடங்கி வைத்தார். மொத்தம் 8 ஆயிரத்து 750 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
வடக்கு ஒன்றியத்தில் 98 மையங்களில், 9 ஆயிரத்து 200 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. நெகமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை கோவை ரோட்டரி கிளப் செயலாளர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிணத்துக்கடவுஆனைமலை ஒன்றியத்தில் 105 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. பெரியபோது ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமை டாக்டர் ராகுல்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த பகுதியில் 14 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் டாப்சிலிப் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களின் குழந்தைகளுக்கு 2 நடமாடும் வாகனங்கள் மூலம் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. டாக்டர் கிரிதரன் தலைமையில் டாப்சிலிப், கோழிக்கமுத்தி, பூமாட்டி, சின்னாறு, எருமைப்பாறை ஆகிய இடங்களிலும், டாக்டர் விக்னேஷ் தலைமையில் நாகூர்ஊத்து, பழைய சர்க்கார்பதி உள்பட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 97 மையங்களில் 8 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. முத்துகவுண்டனூரில் நடந்த முகாமை எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் மருத்துவ குழுவினர் சொட்டு மருந்து முகாம்களை பார்வையிட்டனர்.
வால்பாறைவால்பாறை நகராட்சி பகுதியில் 101 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காந்தி சிலை பஸ் நிறுத்தத்தில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை டாக்டர் பிரவீன், முகாமை தொடங்கி வைத்தார். இதில் 4 ஆயிரத்து 33 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 60 மையங்களில் 4 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் கிருஷ்ணன் தலைமையில் டாக்டர்கள் வனிதா, சாஜிதாபர்வீன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்கள்.
பொள்ளாச்சி வட்டார பகுதியில் மொத்தம் 57 ஆயிரத்து 483 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று சொட்டு மருந்து வழங்க உள்ளனர். அடுத்த போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 30–ந் தேதி நடக்கிறது.