மாவட்டம் முழுவதும் 1,313 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
மாவட்டம் முழுவதும் 1,313 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.
திண்டுக்கல்,
தமிழகம் முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1,313 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அங்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி கமலா நேரு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடந்தது. இந்த முகாமில் கலெக்டர் டி.ஜி.வினய் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். அப்போது, அவர் கூறும்போது, ‘மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 87 ஆயிரத்து 461 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வருகிற 30–ந்தேதி இரண்டாம் கட்டமாக முகாம்கள் நடக்கும்’ என்றார்.
97.2 சதவீதம்...இதே போல, பழனி நகராட்சி சார்பில் அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனையில் நடந்த முகாமை பொது சுகாதார இணை இயக்குனர் பிரேம்குமார், நகராட்சி ஆணையர் வெங்கடேசன், நகர் நல அலுவலர் விஜயசந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதையொட்டி, பழனி கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களின் குழந்தைகள் 1,628 பேருக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கொடைக்கானல் நகராட்சியில் நகர்நல அலுவலர் ராம்குமார் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இந்த முகாம் மூலம் மாவட்டம் முழுவதும் 97.2 சதவீதம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது. விடுபட்டவர்களுக்கு வீடு, வீடாக சென்று சொட்டு மருந்து வழங்க இருக்கிறோம். மேலும், அடுத்த கட்டமாக நடக்கும் முகாமிலும் அனைவருக்கும் சொட்டு மருந்த வழங்கப்படும்’ என்றார்.