புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு


புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 April 2017 4:00 AM IST (Updated: 3 April 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதுவைக்கு சுற்றுலா வந்த பயணிகள் தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளுக்குள்ளேயே இருந்தனர். பகல் நேரத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கடலில் குளித்து மகிழ்ந்தனர்

வேலையின் காரணமாக பகல் நேரத்தில் வெளியே சென்றவர்கள் வெயிலின் கொடுமையால் அவதி அடைந்தனர். கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் குடை பிடித்தபடியும், துணியை பிடித்தபடியும் சென்றனர்.மேலும் ஆங்காங்கே சாலையோரம் விற்பனை செய்யப்படும் நுங்கு, இளநீர் மற்றும் குளிர்பானங்களை குடித்து வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொண்டனர்.

வெயிலின் தாக்கத்தால் புதுச்சேரியின் முக்கியமான பொழுதுபோக்கு இடங்களாக விளங்கும் பாரதிபூங்கா, கடற்கரைசாலை, தாவரவியல் பூங்கா மற்றும் நோணாங்குப்பம் படகுக்குழாம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டுமே இங்கு வந்தனர். அவர்கள் படகு குழாமில் இருந்து படகு மூலமாக பாரடைஸ் பீச்சுக்கு சென்றனர். அங்கு அவர்கள் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க உல்லாசமாக கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

கடற்கரையில் மக்கள் கூட்டம்

இந்த நிலையில் மாலையில் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியது. அதன் பின்னரே பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக பாரதிபூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு சென்றனர். அங்கு உள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

மாலை முதல் கடற்கரையிலும் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்று அங்கு மணலில் அமர்ந்து காற்று வாங்கி மகிழ்ந்தனர். தங்களுக்கு தேவையான தின்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். பின்னர் இரவு நேரத்தில் அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.


Next Story