மோட்டார் கொட்டகையில் குளித்தபோது மின்சார கம்பி அறுந்து விழுந்து மாணவன் சாவு
திருக்கனூர் அருகே மோட்டார் கொட்டகையில் குளித்தபோது மின்சார கம்பி அறுந்து விழுந்து மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
திருக்கனூர்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி, கூலித்தொழிலாளி. இவருடைய மகன் தவசி என்கிற சரவணன் (வயது 15). அங்குள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து, தற்போது நடைபெற்ற அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்துள்ளான்.
தேர்வு விடுமுறையை கொண்டாடுவதற்காக புதுவை மாநிலம் திருக்கனூரை அடுத்த சுத்துக்கேணி காலனியில் உள்ள பெரியப்பா சின்னையன் (60) வீட்டுக்கு சரவணன் வந்திருந்தான். நேற்று மதியம் 1 மணியளவில் அங்குள்ள நண்பர்களுடன் சந்தைபுதுக்குப்பத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மோட்டார் கொட்டகையில் குளிக்கச் சென்றார். அங்கு தண்ணீரில் விளையாடியபடி ஆனந்தமாக குளித்தனர்.
மின்சாரம் தாக்கி சாவுஅப்போது மோட்டார் கொட்டகைக்கு வரும் மின்சார கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து சரவணன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் சுருண்டு விழுந்து அவன் பரிதாபமாக இறந்தான். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர்.
மேலும் மோட்டார் கொட்டகையில் குளித்துக்கொண்டிருந்த மற்ற சிறுவர்களை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்த சரவணனின் உறவினர்கள் விரைந்து வந்து, அவனது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் மாணவனின் உடலை தூக்கிக்கொண்டு சுத்துக்கேணி பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். அங்கு உடலை வைத்து, திடீர் மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைதகவல் அறிந்த திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பிகளை மாற்றக்கோரி காட்டேரிக்குப்பம் மின் அலுவலகத்திலும், போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் மின்கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக தற்போது மின்சார கம்பி அறுந்து விழுந்து மாணவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இதற்கு காரணமான மின்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மோட்டார் கொட்டகையில் மின்சார வயரை சரியாக பராமரிக்காத அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், இறந்த மாணவனின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்புஇதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக குமராப்பாளையம் – சந்தை புதுக்குப்பம் சாலையில் மதியம் 2 முதல் 3.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.