ராயனூரில் உள்ள மதுபான கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ராயனூரில் உள்ள மதுபான கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 April 2017 4:30 AM IST (Updated: 3 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

ராயனூரில் உள்ள மதுபான கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்,

கரூர் அருகே உள்ள ராயனூரில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையை மூடக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள அரசு மதுபான கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் ராயனூரில் உள்ள மதுபான கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் நேற்று பகல் 11.45 மணி அளவில் மதுபான கடை ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் கடை முன்பு கூடி கடையை திறக்கக்கூடாது என்று முற்றுகை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கரூர்- ஈசநத்தம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள் சமாதானம் ஆகவில்லை. மதுபான கடையை அகற்றும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் சென்றன. இந்த மறியல் போராட்டத்தால் கரூர்- ஈசநத்தம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட மதுபான கடை அலுவலர்களிடம் கேட்டபோது, ராயனூரில் உள்ள மதுபான கடை கரூர்- ஈசநத்தம் வண்டி பாதை என்று தான் உள்ளது. மாநில நெடுஞ்சாலை என்று இல்லை. அதனால் இந்த கடை மூடப்படவில்லை. இதனால் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று கூறினர்.

10 வருடமாக...

இது குறித்து அந்த பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது, இங்கு உள்ள மதுபான கடையால் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதியில்லாமல் உள்ளோம். பலர் குடித்துவிட்டு சாலையின் ஓரத்திலேயே படுத்துவிட்டு சத்தம் போட்டுக்கொண்டே உள்ளனர். ஒரு சிலர் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டே உள்ளனர். இதனால் அந்த வழியாக பெண்கள், பொதுமக்கள் நடந்து செல்வதற்கே பயமாக இருக்கிறது. எனவே இந்த கடையை மூடக்கோரி கடந்த 10 வருடமாக போராட்டம் நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

கடைக்கு விடுமுறை

கடையை மூடக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 1 மணி நேரமாக போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்திக்கொண்டு இருக்கும் போது கடை முன்பு மதுபானம் வாங்க மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இந்த நிலையில் கடையை திறக்காமல் ஊழியர்கள் கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். கடையை திறந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அந்த கடைக்கு விடுமுறை என்று கூறிவிட்டு ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர். இதைத்தொடர்ந்து மதுபானம் வாங்க வரிசையில் காத்து நின்றவர்கள் வேறு கடைக்கு படையெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story