திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது


திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2017 4:30 AM IST (Updated: 3 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 4 வாகனங்கள் மீட்கப்பட்டன.

திருச்சி,

திருச்சி மாநகரில் அரசு மருத்துவமனை, கே.கே.நகர், கண்டோன்மெண்ட், கோட்டை ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடு போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் பிரபாகரன் (குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு) மேற்பார்வையில் ஸ்ரீரங்கம் சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மலைச்சாமி தலைமையில் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்கிற ஜமால் முகமது (வயது 19), திருச்சி ரெட்டை வாய்க்காலை சேர்ந்த கார்த்திக் (22) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும், திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் வாகன திருட்டு வழக்கும், கரூர் மாவட்டம் தோகைமலை போலீஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

4 வாகனங்கள் மீட்பு

மேலும் விசாரணையில் 2 பேரும் சேர்ந்து கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி லாசன்ஸ் ரோடு, அய்யப்பன் கோவில் அருகில் ஒரு மோட்டார் சைக்கிளையும், கடந்த 30-ந்தேதி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் ஒரு மோட்டார் சைக்கிளையும், அரசு மருத்துவமனையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும், கடந்த 31-ந் தேதி இரவு சத்திரம் பஸ் நிலையத்தில் ஒரு மோட்டார் சைக்கிளையும் கள்ளச்சாவி போட்டு திருடி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து ஜெகன், கார்த்திக் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருடிய மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த இடத்தில் போலீசார் வாகனங்களை மீட்டனர். மொத்தம் 4 வாகனங்கள் மீட்கப்பட்டன. கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை கமிஷனர் அருண் பாராட்டினார். 

Next Story