சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் ஓட்டல்களில் மதுபார்கள் மூடல்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் எதிரொலியாக மராட்டியத்தில் உள்ள 10 ஆயிரம் ஓட்டல்களில் மதுபார்கள் மூடப்பட்டன.
மும்பை,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் எதிரொலியாக மராட்டியத்தில் உள்ள 10 ஆயிரம் ஓட்டல்களில் மதுபார்கள் மூடப்பட்டன.
உத்தரவுநாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருபுறத்திலும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதனால் மராட்டியம், தமிழகம் உள்பட பல மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பை எப்படி ஈடுசெய்வது என்பது குறித்து மராட்டிய அரசு தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
ஓட்டல்கள்குறிப்பாக மும்பை, புனே, நாக்பூர் போன்ற நகர்புறங்கள் வழியாக செல்லும் நெடுஞ்சாலைகள் அருகில் உள்ள மதுபான கடைகள், பார், ஓட்டலில் உள்ள பார்கள் போன்றவற்றை மூடுவதால் அரசுக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்படும்.
இதுகுறித்து மும்பை ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ஆதார்ஷ் செட்டி கூறியதாவது:–
மராட்டியத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஓட்டல்களில் மதுபார்கள் மூடப்பட்டு, மதுவிற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 1,000 ஓட்டல்கள் மூன்று நட்சத்திர மற்றும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்டவையாகும். இவற்றில் பல ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்நாட்டு விமான நிலையங்களுக்கு அருகில் அமைந்துள்ளன. இதனால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.