பரேல் மற்றும் எல்பிஸ்டன் ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசாரின் திடீர் சோதனையால் பரபரப்பு
மும்பையில் உள்ள பரேல் மற்றும் எல்பிஸ்டன் ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக வெடிகுண்டு மிரட்டல்.
மும்பை,
மும்பையில் உள்ள பரேல் மற்றும் எல்பிஸ்டன் ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் அவை வெடிக்க உள்ளதாகவும் நேற்று மும்பை ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து மிரட்டியுள்ளார்.
இது குறித்து அறிந்ததும் ரெயில்வே போலீசார் மற்றும் மும்பை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் இரு ரெயில் நிலையங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். போலீசாரின் திடீர் சோதனையால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
ஒவ்வொரு ரெயிலிலும் ஏறி, இறங்கி சோதனைபோட்டனர். சுமார் 2 மணி நேரம் நடத்திய சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.