கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய காப்பீடு முறையை ரத்து செய்து விட்டு, பழைய காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பு நிதியை உருவாக்க வேண்டும். பெண் மருத்துவர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு மத்திய அரசு ஊழியர்களை போல வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட சங்கத்தின் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.