விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிலை திருடிய வழக்கில் அண்ணன்–தம்பி கைது
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிலை திருடிய வழக்கில் அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2002–ம் ஆண்டில் அர்த்தநாரீஸ்வரர் சிலை, பிரத்யங்கரா தேவி சிலை, கணபதி சிலை, ஞானசக்தி சிலை, கிரியாசக்தி சிலை உள்ளிட்ட 6 கலைநயமிக்க கற்சிலைகள் திருடப்பட்டது. சுமார் 1,400 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது. ஆனால் இந்த சிலைகள் திருட்டு போனது பற்றி கோவில் நிர்வாகம் உடனடியாக புகார் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திரகபூர் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
வெளிநாட்டில் விற்பனைஅப்போது விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் திருடப்பட்டிருப்பதும், அந்த சிலைகள் மும்பையைச் சேர்ந்த லாப பிரகாஷ், ஆதித்யாபிரகாஷ் ஆகியோர் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் அர்த்தநாரீஸ்வரர் சிலை மட்டும் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் விற்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அந்த சிலை தற்போது மீட்கப்பட்டு கும்பகோணத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் பிரத்யங்கராதேவி சிலையும் மீட்கப்பட்டு விட்டது. மேலும் 4 சிலைகள் ஆஸ்திரேலிய கலைக்கூடத்தில் உள்ளன. இந்த சிலைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வழக்கு பதிவுஇந்த நிலையில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிலைகள் திருடப்பட்டது குறித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் சுபாஷ்கபூருடன் சேர்ந்து மாமல்லபுரத்தில் கலைக்கூடம் நடத்தி வந்த லட்சுமிநரசிம்மன், அவரது மாமா சீத்தாராமையா, மயிலாப்பூர் ஊமைத்துரை(68), அவரது சகோதரர் அண்ணாதுரை மற்றும் சிலர் ஆகியோரும் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர்களில் லட்சுமிநரசிம்மன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஊமைத்துரை, அண்ணாதுரை மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்தனர்.
சிறையில் அடைப்புஇந்த நிலையில் தலைமறைவாக இருந்த மயிலாப்பூர் ஊமைத்துரை, தஞ்சாவூரைச்சேர்ந்த அவரது சகோதரர் அண்ணாதுரை ஆகிய இருவரையும் கடந்த புதன்கிழமையன்று சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர். இருவரும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிலைகளை திருடியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலைகடத்தல் பிரிவு போலீசார் விருத்தாசலம் 1–வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஊமைத்துரையையும், அண்ணாத்துரையையும் ஆஜர்படுத்தினார்கள். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.