ஊற்றுத்தண்ணீருக்கும் தட்டுப்பாடு: குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் மந்தாடா பகுதி பொதுமக்கள் கோரிக்கை


ஊற்றுத்தண்ணீருக்கும் தட்டுப்பாடு: குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் மந்தாடா பகுதி பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 April 2017 4:30 AM IST (Updated: 14 April 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊற்றுத்தண்ணீருக்கும் தட்டுப்பாடு உள்ளதால், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்

ஊட்டி,

ஊட்டி–குன்னூர் சாலையில் மந்தாடா அருகே புதுக்காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் 300 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதி கேத்தி பேரூராட்சியின் 6–வது வார்டுக்கு உட்பட்டது. இங்கு கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த பகுதி பெண்கள் அருகில் உள்ள சோலை பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த பகுதியில் காட்டெருமைகள் மற்றும் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஊற்று தண்ணீரை சேகரித்து வருகின்றனர். இது குறித்து பல முறை மனு கொடுக்கப்பட்டும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விபத்து ஏற்படும் அபாயம்

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மேலும் கூறியதாவது:– மந்தாடா புதுலைன் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க ஊட்டி–குன்னூர் சாலையோரத்தில் நீர்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தொட்டிக்கு வனப்பகுதியில் இருந்துதான் தண்ணீர் வர வேண்டும். வேறு எந்த குடிநீர் ஆதாரமும் இல்லை. வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் எங்களுக்கு போதுமான குடிநீர் வருவது இல்லை. இதனால் ஊற்று தண்ணீரை எடுத்து வருகிறோம். இதிலும் தட்டுப்பாடு உள்ளது. ஒரு குடத்தை நிரப்புவதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் ஆகிறது. இதனால் 300 குடும்பங்களுக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதுதவிர துணி துவைக்க கூட இந்த தண்ணீரைதான் நம்பி உள்ளோம்.

நடவடிக்கை தேவை

மேலும் தண்ணீரை எடுக்க ஊட்டி–குன்னூர் சாலையை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால் அதிகளவு வாகனங்கள் வருகின்றன. இதன்காரணமாக தண்ணீர் குடத்துடன் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களது பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story