செம்மொழிக்கு புகழ்சேர்த்த அயர்லாந்து அறிஞர்


செம்மொழிக்கு புகழ்சேர்த்த அயர்லாந்து அறிஞர்
x
தினத்தந்தி 14 April 2017 1:46 PM IST (Updated: 14 April 2017 1:45 PM IST)
t-max-icont-min-icon

அயர்லாந்து நாட்டில் பிறந்த சங்கை ராபர்ட் கால்டுவெல் ஐயர், எபிரேயம், கிரேக்கம், லத்தீன் போன்ற

கால்டுவெல் ஐயர்

புராதன மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மேலைநாட்டு மொழிகளிலும், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மற்றும் குடகு போன்ற இந்திய மொழிகளிலும் நல்ல புலமை பெற்றிருந்தார். ‘திராவிடம்’ என்ற சொல்லை முதன் முதலில் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை பேராயர் டாக்டர் சங்கை ராபர்ட் கால்டுவெல் ஐயரையே சேரும்.

மொழி வரலாற்றிலும், தமிழக அரசியல் வரலாற்றிலும் ஒரு புரட்சியை பற்றி எரிய வைத்தவர் கால்டுவெல் என்றால் மிகையாகாது. அவரது 15 ஆண்டுகால அயராத உழைப்பின் மணிமுடி படைப்புத்தான், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஆய்வு நூல்.

இந்த நூலில் ‘ஆரிய இன மொழிகள் வேறு; திராவிட இன மொழிகள் வேறு; தமிழுக்கும், வடமொழிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வடமொழியான சமஸ்கிருதத்தின் உதவியின்றியே தமிழ் தனித்து இயங்க வல்லது. தமிழ் மொழி தனித்து இயங்கும் உயர்தனிச்செம்மொழி!’ என்று உறுதியாக கூறியவர் கால்டுவெல். மேலும் வடமொழியிலிருந்தே தென்மொழியான தமிழ்மொழி தோன்றியதென்ற பழங்கருத்தை தவறு என்றும் நிரூபித்தார்.

திராவிட மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மற்றும் குடகு போன்ற திருந்திய மொழிகளும் துதம், ஓராவோன், கோதம், கந்தம் மற்றும் ராஜ்மகால் போன்ற திருந்தாத மொழிகளுமாக உள்ள ஒரு மொழிக்கூட்டத்திற்கு முதல்மொழி தலைமையும், பழமையும் வாய்ந்த திருந்திய மொழி தமிழே! என்று உறுதிபட தனது நூலில் நிரூபித்து உள்ளார். 18 மொழிகளில் புலமை பெற்ற கால்டுவெல் ஐயர் கி.பி.1856-ம் ஆண்டுதான் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை வெளியிட்டார்.

மொழி வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய இந்த நூலை சென்னை பல்கலைக்கழகம் 1875, 1953, 1961, 1976 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து வெளியிட்டுள்ளது. கால்டுவெல் ஆற்றிய மொழிப்பணிக்காக கிளாஸ்கோ பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்தது. ஆங்கில தலைமை பீடம் அவருக்கு, வேதவிற்பன்னர் என்ற பட்டம் அளித்தது.

இவர், திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் கிறிஸ்தவ மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். இடையன்குடி என்ற வறண்டபகுதியை வாழ்வதற்கேற்ற பகுதியாக மாற்றியவர். அங்கு தினமும் ஒரு மரம் நடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி அவர் நட்டமரங்களில் ஒன்று, அவர் நினைவாக உள்ளது. அதற்கு, ‘புட்டாமரம்’ என்று பெயர்.

தமிழின் பெருமையை உயர்த்திய கால்டுவெல் ஐயரின் தோற்றம் 7.5.1814. அவர் மறைந்தது 28.8.1891. அவர் மறைந்தாலும் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது. அவர் தனக்கென கட்டிய வீடு, 17.2.2011 அன்று தமிழறிஞர் கால்டுவெல் நினைவு இல்லமாக அப்போதைய தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அங்கே அவரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. தூத்துக் குடியில் பழமையான கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி மேற்கே கால்டுவெல் கல்லூரி ஆகியவை இன்றும் அவரது புகழை பறைசாற்றுகிறது.

Next Story