கம்பரை திகைக்க வைத்த சிறுவன்


கம்பரை திகைக்க வைத்த சிறுவன்
x
தினத்தந்தி 14 April 2017 1:48 PM IST (Updated: 14 April 2017 1:48 PM IST)
t-max-icont-min-icon

கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கும், பாண்டிய மன்னனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து பாண்டிய நாட்டில் இனி இருக்கக் கூடாது என்று முடிவெடுத்த கம்பர், சோழ நாட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். பல நாட்கள் நடந்து சோழ நாட்டின் எல்லை பகுதியில் உள்ள ஒரு சிற்றூரை அடைந்தார்.

காலை வேளையில் சிற்றூரின் வயல்வெளி ஓரத்தில் ஒரு சிறுவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அதை தூரத்தில் இருந்து கவனித்த கம்பர், பெரும் கவிஞராகிய நான் வருவதை அந்த சிறுவன் அறிந்திருந்தும், எழுந்து மரியாதை தரவில்லையே, இந்த சிறுவயதிலேயே இவ்வாறு இருக்கலாமா? என கோபம் கொண்டு, “நுனிக்கரும்பும் இனிக்குமோ?” என்று சிலேடையாக சிறுவன் காதில் விழும்படி கூறினார். அதற்கு அந்த சிறுவன், சிறிதும் யோசிக்காமல் கணநேரத்தில் “சகலமும் கசக்கும் அய்யா” என்று பதிலுரைத்தான். இதனை சற்றும் எதிர்பாராத கம்பர் திகைத்துப் போனார்.

இதற்கான அர்த்தத்தை கம்பர் அறிந்து கொண் டார். அந்த அர்த்தம் என்ன தெரி யுமா?

கரும்பின் நுனிப்பகுதி எப்போதும் இனிப்பு சுவை குறைந்து காணப்படும். அடிப்பகுதிதான் தித்திப்பான இனிப்புடன் இருக்கும். உலகம் அறிந்திடாத சிறுவன், இன்னும் பக்குவப்பட வேண்டும். அதாவது பெரியவர்களுக்கு மரியாதை தருவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவே கம்பர் நுனிக்கரும்பும் இனிக்குமோ? என்றார்.

ஆனால் அந்த சிறுவன், காலைக்கடன் முடிக்கும் வேளையில், வயதில் பெரியவரான நீர் மரியாதையை எதிர்பார்க்கலாமா? என்று கேட்கும் விதத்தில் ‘சகலமும் கசக்கும் அய்யா’ என்று பதிலுரைத்தான். வேம்பில் நுனிப்பகுதி, அடிப்பகுதி என வேறுபாடு இன்றி அனைத்து பகுதியும் கசக்கும். கம்பரின் கருத்து முழுவதும் கசக்கும் விதத்தில் இருக்கிறது என்பதையே அவன் அவ்வாறு உணர்த்தினான்.

அதை உணர்ந்த கம்பர், சோழ நாட்டின் சிற்றூரான இந்த ஊரிலேயே ஒரு சிறுவன் இத்தனை கல்வியறிவு பெற்றிருந்தால், இங்குள்ள பெரியவர்கள் எத்தனை கல்வியறிவு பெற்றிருப்பார்கள். அதனால் நாம் சோழ நாட்டிற்கு செல்வதை விட, சேர நாட்டிற்கு சென்று விடலாம் என்று முடிவெடுத்து சேர நாடு நோக்கி தன் பயணத்தை தொடங்கினார். அங்கு சென்று, சேர மன்னனை தன்னுடைய பாட்டாலும், புலமையாலும் கவர்ந்தார்.

Next Story