தமிழுக்கு சமணர்கள் செய்த பெருந்தொண்டு


தமிழுக்கு சமணர்கள் செய்த பெருந்தொண்டு
x
தினத்தந்தி 14 April 2017 3:12 PM IST (Updated: 14 April 2017 3:18 PM IST)
t-max-icont-min-icon

‘தமிழுக்கு சமணர்கள் ஆற்றிய பணிகள் ஏராளம்’ என்று கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு கூறிய ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்த கல்லூரி மாணவிகளின் கண்கள் வியப்பால் விரியத்தொடங்கின.

மாணவிகளுக்கு புலவர் செ.ராசு விளக்கம் அளிக்கும் காட்சி.

காரணம், இது சமீப காலத்து கதையல்ல..! தமிழ் இலக்கிய வரலாற்றில் புதைந்து கிடக்கும் சான்றுகள். எப்போது தொடங்கியது என்று தெரியாத மூத்த மொழியாம் தமிழ் எத்தனையோ படை எடுப்புகளையும் வென்று, இன்றும் மண்ணில் நின்று நிலைத்து புகழோடு வளர்ந்து வருகிறது.

மொழியோடு போர் தொடுக்க வந்தவர்கள் இந்த மொழிக்கே அடிமையாகிப்போனதையும், தம் திறத்தால் இன்னும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்ததையும் தமிழ் வரலாறு ஆங்காங்கே பதிவு செய்து வைத்து உள்ளது.
அப்படி ஒரு பெரும் வரலாற்றைப்பற்றிதான் புலவர் செ.ராசு, மாணவிகளுக்கு விளக்கிக்கொண்டு இருந்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறை தலைவராக இருந்து, கொங்கு மண்டலத்தின் வரலாற்றை தோண்டி எடுத்த பெருமைக்கு உரியவர். தமிழக அரசின் சிறந்த அறிஞருக்கான விருதினை பெற்று, 80-வது வயதிலும் தமிழர்களின் பண்டைய வரலாற்றை தேடிப்பிடித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வரும் இவர், தன்னை சந்திக்க வரும் மாணவ-மாணவிகளுக்கு எந்த தடையும் கூறாமல் ஆதாரங்களுடன் வரலாற்றை எடுத்துக்கூறி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் மாணவிகள் சிலர் அவரோடு கலந்துரையாடிய போது கிடைத்த சில தகவல்கள் இங்கே...

“ஈரோடு மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக அமைந் திருக்கும் விஜயமங்கலம் பகுதிக்கு விஜயபுரி, செந்தமிழ் மங்கை என்றெல்லாம் பெயர் உண்டு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதி இது. கொங்கு நாடுகள் 24 ஆக பிரிக்கப்பட்டு இருந்தன. அதில் இந்த பகுதியும் ஒன்று. இங்குள்ள பஸ்திபுரம் என்ற பகுதியில் ஒரு கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவில் இந்து கோவில்களின் தோற்றத்தில் உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த கோவிலை நெட்டை கோபுரம் என்று அழைக்கிறார்கள். காரணம் பண்டைய காலம் முதல் மிகப்பெரிய ராஜகோபுரம் கொண்ட கோவிலாக இது உள்ளது.

இந்த கோவில் கி.பி.3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சமணகோவிலாகும். பின்னாளில் சாமுண்டராயன் என்பவரும், சோழ மன்னர்களும் கோவில் பணிகள் செய்து உள்ளனர். சமண தீர்த்தங்கரர்களில் 24-வது தீர்த்தங்கரரான சந்திர பிரபா தீர்த்தங்கரர் நினைவாக இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது.
இதில் என்ன விசேஷம் என்றால் இந்த விஜயமங்கலம் கோவில் ஒரு காலத்தில் தமிழ்ச்சங்கமாக திகழ்ந்தது. சமண மதம் என்பது வடநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்தது. அதுவும் சந்திரகுப்த மவுரியர், அவரது குரு பத்திரபாகுவுடன் தென் இந்தியாவில் 3 ஆயிரம் சீடர்களுடன் வந்து சமண மதத்தை போதித்தார்.

அப்போது தமிழகத்துக்கு வந்த சமணர்கள் தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்தனர். இதன் மூலம் தமிழுக்கு பல நூல்கள் கிடைத்தன. நிகண்டுகள், காப்பியங்கள், இலக்கண-இலக்கிய புத்தகங்கள் கிடைத்தன. அப்படி இயற்றப்பட்ட ஒரு காப்பியம்தான் பெருங்கதை. இந்த காப்பியத்தை இயற்றியவர் கொங்கு வேளிர் என்பவர். இவர் வடநாட்டு மொழியான பைசாச மொழியில் ஸ்ரீபிருகத்கதா என்னும் காப்பியத்தை பெருங்கதை என்ற பெயரில் நூலாக எழுத முடிவு செய்தார். இதற்கான பணியை அவர் மேற்கொண்டு இருந்தபோது, விஜயமங்கலம் தமிழ்ச்சங்கத்துக்கு தகவல் சென்றது.

தமிழ்ச்சங்கத்தில் தமிழ் மொழியின் 7 இலக்கிய, இலக்கண வகைகளுக்கும் தலா 7 உறுப்பினர்கள் வீதம் 49 பேர் இருந்தனர். அவர்கள் பெருங்கதையை இயற்றும் பணியில் இருந்த கொங்கு வேளிருக்கு ஒரு ஓலை அனுப்பினார்கள். அதில், ‘ஸ்ரீபிருகத்கதா என்ற கதையின் நாயகனான உதயணனின் வரலாற்றை, பைசாச மொழியில் இருந்து வடமொழி சமஸ்கிருதத்தில் தலைக்காட்டு கங்கமன்னன் துர்வநீதன் எழுதி இருக்கிறார். தற்போது தமிழில் அதை மொழி மாற்றம் செய்யும் தகுதியும், அறிவாற்றலும் உங்களுக்கு இருக்கிறதா? என்பதை தமிழ்ச்சங்கம் முடிவு செய்யும். எனவே நீங்கள் தமிழ்ச்சங்கத்துக்கு வந்து எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

சமணக்கோவில் சிற்பங்களை பார்வையிடும் மாணவிகள்.


அதைப்பார்த்த கொங்கு வேளிர் கவலையில் ஆழ்ந்தார். காரணம், தமிழ்சங்கத்தில் இருந்த 49 பேரும் அனைத்து துறைகளிலும் வல்லவர்கள். அவர்கள் தன் திறமையை குறைத்து மதிப்பிட்டால் பெருங்கதையை இயற்ற முடியாதே என்ற வருத்தம் அவருள் இருந்தது. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் இருந்தார். இதனை அவரது வீட்டு வேலைக்காரப்பெண் பார்த்தார். அந்தகாலத்தில் அவர் அடிமைப்பெண். அவர், கொங்கு வேளிரின் முகவாட்டத்தை பார்த்து, என்ன விஷயம் என்று கேட்டாள். அவரும் விவரத்தை கூறினார்.

அதைக்கேட்ட அந்த வேலைக்கார பெண், ‘அய்யா நீங்கள் எத்தனை பெரியவர். உங்களை அவர்கள் கேள்வி கேட்டு நீங்கள் பதில் கூறுவதா? நீங்கள் தமிழ்ச்சங்கத்துக்கு செல்லவேண்டாம். நான் செல்கிறேன். அவர்களின் கேள்விக்கு நானே பதில் அளிக்கிறேன்’ என்று கூறினார்.

அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த கொங்குவேளிர் மனமில்லாமல் ஒப்புதல் அளித்தார். குறிப்பிட்ட நாளில் கொங்கு வேளிரின் வீட்டு அடிமைப்பெண் தமிழ்ச்சங்கத்தில் ஆஜர் ஆனார். தமிழ்ச்சங்க புலவர்களும், அறிஞர்களும் ஆச்சரியத்துடன் காரணத்தை கேட்டனர். அதற்கு அந்த பெண், நீங்கள் உங்கள் கேள்விகளை கேட்கலாம். எங்கள் புலவர் சார்பில் நான் பதில் அளிப்பேன். எனது பதிலில் திருப்தி இல்லை என்றால், அவர் வருவார் என்றார்.

தமிழ்ச்சங்க புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அடிமைப்பெண் சரியான பதில் கூறினார். கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே, அதுபோல கொங்குவேளிர் வீட்டு வேலைக்கார பெண் கூட அறிவில் சிறந்தவராக இருந்தார். அவரது பதிலில் திருப்தியுற்ற அவர்கள் அதிசயித்துப்போயினர். உதயணன் வரலாற்றை பெருங்கதையாக வடிக்க தமிழ்ச்சங்கம் அனுமதி அளித்தது. கொங்கு வேளிர் தனது பெருங் கதையை இதே விஜயமங்கலம் சமண கோவிலில்தான் அரங்கேற்றம் செய்தார்.
இதுபோல் விஜயமங்கலத்தை அடுத்து உள்ள சீனாபுரத்தில் வாழ்ந்த பவணந்த முனிவர் இலக்கண நூலான நன்னூலை இயற்றினார். இந்த நூல் விஜயமங்கலம் சமணக் கோவில் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

தமிழ் இலக்கியம் பல்வேறு காதல் கதைகளை தன்னுள் கொண்டு உள்ளது. குறிப்பாக கடவுள்கள் மீது பெண் பக்தைகள் கொண்ட காதல் சிறப்பு மிக்கது. அப்படி கடவுள் மீது காதல் கொண்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்று விரதம் இருந்த பெண் துறவியின் கதை விஜயமங்கலம் கோவிலுடன் தொடர்புடையதாகும்.

இன்றைய பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் புள்ளப்பை. இவர் தீவிர சமண சமய பெண் துறவி. கடவுள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். தனது இந்த பெண் பிறவியில் சொர்க்கம் செல்ல முடியாது என்பதை உணர்ந்த அவர் விரைவாக இந்த பிறவியை நீத்து, அடுத்த பிறவியில் ஆணாக பிறந்து சொர்க்கத்தை அடைய முடிவு செய்தார்.

அவர் தனது அண்ணன் சாமுண்டராயன் என்பவரிடம் இந்த பிறவியை நீக்க வேண்டி தவம் செய்ய வேண்டும். அதற்கு உற்ற இடத்தை தேர்ந்தெடுத்து கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். சாமுண்டராயன் சங்க-சாளுக்கிய மன்னர்களின் கூட்டுப்படை தளபதியாக இருந்தவர். அவர் தனது தங்கை புள்ளப்பை விரும்பியபடி விரதம் இருக்க தேர்ந்து எடுத்த இடம் விஜயமங்கலம் கோவில்.

வடக்கே இருந்து வந்த புள்ளப்பை, விஜயமங்கலம் கோவிலில் சல்லேகனை எனப்படும் விரதத்தை தொடங்கினார். வடக்கு இருத்தல் என கூறப்படும் இந்த விரதத்தின்போது தவத்தில் ஈடுபடுபவர்கள் உணவு உண்ணாமல் தவம் செய்து உயிரை போக்கிக் கொள்வார்கள்.

அதன்படி 1,300 ஆண்டுகளுக்கு முன்பு புள்ளப்பை தனது சல்லேகனை விரதத்தை நிறைவேற்றிய இந்த தலத்தில் அதுகுறித்த கல்வெட்டும், சிற்பமும் தனியாக செதுக்கப்பட்டு உள்ளது. இன்னும் எத்தனையோ இலக்கிய, வரலாற்று நிகழ்வுகளை தன்னுள்ளே தாங்கிக்கொண்டு இன்றும் எழுந்து நிற்கிறது விஜயமங்கலம் சமணக்கோவில்” என்று விளக்கினார். புலவர் செ.ராசு.

அவர் கூறிய அத்தனை வரலாற்று பதிவுகளையும் தன்னுள் வாங்கிக்கொண்ட மாணவிகள், ஆர்வத்துடன் விஜயமங்கலம் கோவிலுக்குள் சென்று பார்வையிட்டு திரும்பினர். அப்போது அவர்கள் கூறிய சில வரிகள், ‘நம் மண்ணில் இத்தனை பெரிய ஆச்சரியத்துக்குரிய வரலாற்று சின்னமா?... 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய கலாசாரத்துக்கு சொந்தமான தமிழ் மக்கள் வாழ்ந்த, கலையும், இலக்கியமும் வளர்த்த இடத்தில் நாங்களும் இருந்தோம் என்பதே பெரும் பெருமை’ என்றார்கள்.

(கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள்: பேராசிரியை என்.தீபப்பிரியா, மாணவிகள் வி.நாகவேணி, ஆர்.செல்வராணி, ஏ.பிரியங்கா, கே.சபரீஸ்வரி, ஏ.மகேஸ்வரி, எஸ்.பவிஷ்யா, டி.மாரி வானதி, எஸ்.அபிராமி, பி.சங்கீதா, வி.அஸ்மிதா).

Next Story