மூங்கில் இலை மேலே.. தூங்கும் பனி நீரே..


மூங்கில் இலை மேலே.. தூங்கும் பனி நீரே..
x
தினத்தந்தி 14 April 2017 3:15 PM IST (Updated: 14 April 2017 3:14 PM IST)
t-max-icont-min-icon

ஒரு மாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் தென்னந்தோப்பில் நீண்ட கீற்றுகளின் நிழலில் கம்பர் உலா போகிறார்.

வயல் வெளியில் இருந்து பாட்டு சத்தம் கேட்கிறது. தம்மை அறியாமலேயே கம்பரின் கால்கள் அங்கே போகின்றன. ஏற்றம் இறைத்து தண்ணீர் பாய்ச்சிய 3 விவசாயிகள் பாடிக் கொண்டிருந்தனர். “மூங்கில் இலைமேலே...” என்று ஒருவன் பாடுகிறான்.

“தூங்கும் பனி நீரே...” என்று மற்றொரு உழவன் கீதம் இசைக்கிறான். “தூங்கும் பனி நீரை...” என்று மற்றொருவன் கானம் இசைக்க, ஒரு பெண் வந்து ‘பசு கன்று போட்டாச்சு, வீட்டுக்கு வாங்க’ என்று கணவனை அழைக்கிறாள். அப்படியா மகிழ்ச்சி என்று கூவிக் கொண்டே உழவர்கள் வேலையை நாளை தொடரலாம் என்று வீட்டுக்கு புறப்படுகிறார்கள். அந்தி இருள் சூழ்ந்தது.

கம்பர் பாடலில் மனதை பறிகொடுத்து அங்கேயே நிற்கிறார். அடுத்த வரி என்னவாக இருக்கும்? என சொல்லி பார்க் கிறார். மொழி ஒத்துழைக்கவில்லை. ஆற்றின் பாலக்கட்டையில் அப்படியே உட்காருகிறார்.

இரவு வருகிறது. நிலா வருகிறது. கம்பர் அந்த இடத்தை விட்டு அகலாமலே பிரம்மை பிடித்து அமர்கிறார். பறவைகளின் கீச்சொலி தாலாட்ட கண் அயர்ந்து விடுகிறார். அதிகாலை...!

வெண்முயல்கள், மான்கள் ஓடுகின்றன. ஓசையில் கண்விழிக்கிறார். மீண்டும் உழவர்கள் வருகிறார்கள். ஏற்றப்பாட்டு தொடர்கிறது.

“மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை”
என்று பாடல் முடிந்திருந்தது.
இப்போது ஒருவன் பாட்டை தொடங்குகிறான்.
“தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே”


இந்த பாடலை முண்டாசு கட்டிய அந்த விவசாயி பாடி முடித்து வைக்கிறான்.
செஞ்சூரியனின் உதய ரேகைகள் வானில் விரிகின்றன.

கம்பர் மனம் ஆனந்தமாகிறது. விசாலமாகும் நிதானமும் பெற்ற இதயத்துடன் கம்பர் தம் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்.

Next Story