நிதானத்தோடு செயல்பட்டால் துன்பம் வராது


நிதானத்தோடு செயல்பட்டால் துன்பம் வராது
x
தினத்தந்தி 14 April 2017 3:30 PM IST (Updated: 14 April 2017 3:29 PM IST)
t-max-icont-min-icon

மகாத்மாக்கள் மலர்ந்தோங்கிய நாடு, நம் நாடு. எல்லாம் பிரம்மம் என்ற ஒரு மெஞ்ஞான கடவுள் கருத்து கொண்ட நாடு.

சுவாமி ஓங்காரனந்தா

 10 ஆயிரம் ஆண்டுகளாக மகரிஷிகள் செய்த தவங்களும், தவ சக்திகளும் இன்றும் நிறைந்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் நாகரிகங்கள் பரவி, இந்த நாடு பண்பாடுகளையும், தெய்வீக சக்திகளையும் மறந்து, ஒழுக்கங்கள் குறைந்து, துன்பத்தை வரவழைத்து கொள்கிறது.

மாதத்திற்கு 3 முறை மழை பெய்யும். இப்பொழுது வருடத்திற்கு ஒரு முறை கூட மழை பெய்யவில்லை. இந்த உலகம் முழுவதும் வெப்பம் நிறைந்து கொண்டு இருக்கிறது. இத்தகைய வெப்ப சக்தியை அறிவியலால் மாற்ற முடியாது. தெய்வசக்தி மாற்றி விடும். மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் வரும். உணவுகள் பெருகும்.

திருஞான சம்பந்தரின் ஒரு பாட்டுக்கு மூடிக்கிடந்த ஆலய கதவு திறந்தது என்றால் ஆத்ம தியானத்தில் ஈடுபட்டால் அமைதி நிலவும். சீரிய ஒழுக்கத்தோடு, பிரம்ம ஞானப்பேருணர்வோடு சிவனை நோக்கி வணங்கினால் இத்தகைய சூழ்நிலை மாறிவிடும்.

மனிதனாக பிறந்த நாம் சத்தியம், தர்மம் தெரிந்து நியாயத்தை கடைப்பிடிக்க வேண்டும். கொல்லாமை விரதம் எங்கும் வளர்ந்தோங்க வேண்டும். பரஜீவகாருண்ய உணர்வோடு அமைதியாக அவரவர் காரண, காரியங்களை ஆற்றிக் கொண்டு இருக்க வேண்டும். இப் பணிகளால் அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்வினைகள் வந்த வண்ணமிருக்கும்.

சுகம் கிடைக்கும். நற்கருமம், நற்கருணை, நற்புண்ணிய சக்திகள் இவர்களை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கும். எல்லாமே அன்பு! எல்லாம் ஓம், ஓம், ஓம் என்ற ஒலியை தருகிறது. அது ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஏகமாக ஒலிக்கிறது. ஏகத்தில் இருந்து வருவது ஏகானந்தம். ஏகத்தில் இருப்பது ஏகம். அதுவே பரப்பிரம்மம். ஏகம் சந்தோஷமாய் விளங்குகிறது. ஏகம், ஆனந்தமாய் விளங்குகிறது.

இந்த உலகை துன்பத்தில் இருந்துமீட்க வெப்பநிலை குறைந்திட, விளைச்சல் பெருகிட, வாடிய பயிர்கள் வளர்ந்தோங்கி மழை பொழிந்திட, பசி இல்லாமல் இந்த உலகம் அமைதியுடன் வாழ தவசக்தி, ஜெபம், தியானம், புண்ணியம் ஆகிய 4 சக்திகளால் மட்டுமே முடியும். ஆகவே அனைவரும் ஆத்ம தியானத்தில் ஈடுபட வேண்டும். கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். எந்தச்சூழ்நிலையிலும், பாவம் செய்யாமல் இருக்க வேண்டும். பாவம் செய்தால் ஆத்மசாதனை பலிக்காது. மவுனத்தால், நிதானத்தால், கோபத்தை நீக்க வேண்டும். சிவ சாந்தத்தோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் அன்பாக பழகி, மற்றவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும். எந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும் அதிலிருந்து அடுத்த நிமிடம் வெளிவந்து விட வேண்டும். நிதானம் இல்லாததால் வாழ்வே வீணாகிறது. நிதானத்தோடு செயல்பட்டால் துன்பம் வராது. எது செய்தாலும் அது அர்த்தமுள்ள செயலாக இருக்க வேண்டும். இந்த ஹேவிளம்பி ஆண்டு உலகிற்கு நன்மை செய்யும் ஆண்டாக அமையட்டும்.

எல்லாம் வல்ல ஜெகன்மாதா ஓம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை ஆழ்ந்து சிந்தித்து மயிலாடுதுறை பரப்பிரம்ம சற்குரு ஓம் ஸ்ரீ சித்தர் சுவாமிகளின் அருளாசியை ஓங்கார ஆசிரமம் உலக மக்களுக்கு அன்புடன் வழங்குகிறது.

Next Story