தொண்டி அருகே என்கவுன்டரில் பிரபல ரவுடி சுட்டுக் கொலை சப்–இன்ஸ்பெக்டரை வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது சம்பவம்


தொண்டி அருகே என்கவுன்டரில் பிரபல ரவுடி சுட்டுக் கொலை சப்–இன்ஸ்பெக்டரை வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது சம்பவம்
x
தினத்தந்தி 15 April 2017 5:00 AM IST (Updated: 14 April 2017 10:03 PM IST)
t-max-icont-min-icon

தொண்டி அருகே சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள உசிலனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் கோவிந்தன் என்ற கோவிந்தராஜ் (வயது 42). விறகு வியாபாரம் மற்றும் கரி மூட்டம் தொழில் செய்து வந்தார். இவர் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவரிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் தனிப்படை போலீசார் திணையத்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது போலீசாரைக் கண்டதும் கோவிந்தன் காரில் தப்பிச் சென்றார். தனிப்படை போலீசார் மற்றொரு காரில் விரட்டிச் சென்றனர்.

கோவிந்தன் சென்ற கார் தொண்டி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று பின்னர் கடம்பாகுடி விலக்கு சாலையில் நுழைந்து திருவெற்றியூர் அருகே உள்ள மேலஅரும்பூர் சவேரியார் நகருக்குள் சென்றது. அப்போது அந்தக் காரில் இருந்து இறங்கிய கோவிந்தன் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை தனிப்படை போலீசார் விரட்டிச் சென்றனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனிப்படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி மற்றும் ஏட்டு சவுந்திரபாண்டியன் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளார்.

சுட்டனர்

அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தங்களின் தற்காப்புக்காக கோவிந்தனை துப்பாக்கியால் சுட்டனர். இதில் மார்பில் குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தன் இறந்து விட்டதை உறுதி செய்துள்ளனர்.

அதன் பின்னர் கோவிந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொண்டி, உசிலனக்கோட்டை பகுதியில் பதற்ற நிலை உருவானது. அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

ரவுடி கோவிந்தனுக்கு பவானி (40) என்ற மனைவியும், பாண்டியம்மாள் (20) மோனிசா (17) தனலெட்சுமி (15) ஆகிய மகள்களும் உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:–

தொண்டி அருகே உள்ள கொடிப்பங்கு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகு மகன் காசிநாதன் (57). இவர் கடல் சங்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர் வியாபாரம் நிமித்தமாக கீழக்கரை சென்று பணம் வசூல் செய்து வருவது வழக்கமாம். இவரிடம் துல்கருணை என்பவர் கார் டிரைவராக உள்ளார்.

ரவுடி கோவிந்தன் டிரைவர் துல்கருணையிடம் பணத்தாசை காட்டி அவரது உதவியுடன் காசிநாதனிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி கோவிந்தன் ஏற்பாடு செய்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிலர் கீழக்கரையில் இருந்து தொண்டிக்கு சென்று கொண்டிருந்த காசிநாதனின் காரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி ஒரு காரில் கடத்தி சென்றுள்ளனர். சோழந்தூர் அருகே ஒரு காட்டுப்பகுதியில் வைத்து காசிநாதனிடம் ரூ.9 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து காசிநாதன் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் துல்கருணையை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ரவுடி கோவிந்தனுடன் சேர்ந்து காசிநாதனிடம் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பணம் பறிக்க உதவியமைக்காக அவருக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் கூறிய ஆலோசனையின் பேரில் கூடுதலாக பணம் வேண்டும் என்று துல்கருணை கோவிந்தனிடம் போனில் கேட்டுள்ளார். அதன்படி அவரும், அவரது கூட்டாளி சின்ராசும் பணம் கொடுக்க வந்துள்ளனர்.

அரிவாளால் வெட்டினார்

அப்போதுதான் போலீசார் அவரை சுற்றி வளைத்தபோது காரில் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் ஒரு முட்புதருக்குள் ஓடிய கோவிந்தனை பின் தொடர்ந்து சென்றபோது அவர் சப்–இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமியையும், ஏட்டு சவுந்திரபாண்டியனையும் அரிவாளால் கையில் வெட்டியதால் தற்காப்புக்காக ரவுடி கோவிந்தனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் இறந்து போனார்.

பணம் பறிப்புச் சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் டிரைவர் துல்கருணை, சின்ராஜ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்துள்ளனர்.

சப்–இன்ஸ்பெக்டருக்கு சிகிச்சை

இந்த நிலையில் கோவிந்தன் பயன்படுத்திய 2 கார்களையும், கத்தியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவத்தில் காயமடைந்த சப்–இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, ஏட்டு சவுந்திரபாண்டியன் ஆகியோர் திருவாடானை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாக்ஸ்

துப்பாக்கிச் சூடு குறித்து நீதிபதி விசாரணை

நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ் ஆகியோர் நேரில் சென்று கோவிந்தனின் உடலை பார்வையிட்டனர். இதன்பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மனித உரிமை ஆணையத்தின் விதிகளின் படி இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. துப்பாக்கியால் சுட்டதில் கோவிந்தன் இறந்துள்ளதால் இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் முதன்மை குற்றவியல் கோர்ட்டு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி நீதிபதி விசாரணை நடத்த உள்ளார். கொலை செய்யப்பட்ட கோவிந்தன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கூறினார்.


Next Story