கபிலர்மலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
கபிலர்மலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் செய்தனர்.
பரமத்திவேலூர்,
கபிலர்மலை அருகே பெரியசோளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட செம்மடைபாளையத்தில் கடந்த ஒருமாதமாக குடிநீர் வழங்கப்பட வில்லை. இதை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை 6 மணிக்கு கபிலர்மலை–ஜேடர்பாளையம் சாலையில் திடீரென காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜேடர்பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் செல்போன் மூலம் கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகனை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர் ஆழ்துளை கிணறு மின் மோட்டாரை சரிசெய்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இது குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதை பொதுமக்கள் ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்புஇந்தசாலைமறியல் காரணமாக கபிலர்மலை–ஜேடர்பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுது காரணமாக எங்கள் பகுதியில் கடந்த ஒருமாதமாக குடிநீர் கிடைக்க வில்லை. காவிரி குடிநீரும் பொதுகுழாயில் வரவில்லை என்றனர்.
இதனிடையே ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுது சரி செய்யப்பட்டு நேற்று மதியம் அந்த பகுதியில் குடிநீர் வழங்கப்பட்டது.