போலி பதிவெண், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் பறிமுதல்


போலி பதிவெண், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 April 2017 4:15 AM IST (Updated: 14 April 2017 10:38 PM IST)
t-max-icont-min-icon

போலி பதிவெண், தகுதிச்சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்,

தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் ஏராளமானவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வர். இதையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சேலம் சரக துணை ஆணையர் பொன்.செந்தில்நாதன் உத்தரவின் பேரில் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், கஜேந்திரன், பறக்கும்படை ஆய்வாளர் செந்திகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்கள் மற்றும் அதிக பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்த ஆம்னி பஸ் ஒன்று போலி பதிவெண் ஒட்டி இயக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

போலி பதிவெண்

அதாவது, அந்த பஸ்சில் புதுச்சேரி பதிவெண் கொண்ட எண்ணை மறைத்து தமிழக பதிவெண்ணை போலியாக ஒட்டி இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் சுற்றுலா பஸ்சில் பயணிகளை ஏற்றி வந்த மற்றொரு ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர உரிமம் புதுப்பிக்காமல், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நேற்று காலை 9 மணி வரை நடந்தது. இதில் மொத்தம் 14 ஆம்னி பஸ்கள் உள்பட 27 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டன. இதில் 2 ஆம்னி பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story