புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு
புனித வெள்ளியை முன்னிட்டு கடலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிலுவைப்பாதை வழிபாடு நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
கடலூர்,
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். அந்த வகையில் நேற்று கடலூர் சாமிப்பிள்ளை நகர் புனித சகாய அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. இதில் பங்கு தந்தை பெரியநாயகம் தலைமையில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அப்போது கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி உடன் வந்தனர். பின்னர் மாலையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
புனித எபிபெனி தேவாலயம்அதேபோல் கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணிராஜ் அடிகள் தலைமையில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. மேலும் புனித யோவான் சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், மஞ்சக்குப்பம் புனித எபிபெனி சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் போதகர் அருண்ஜெபஸ் ஆல்பர்ட் தலைமையிலும், கடலூர் முதுநகர் மணவெளி அக்கினி எழுப்புதல் தேவாலயத்திலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
கடலூர் ஆற்காடு லூத்தரன் திருச்சபையில் பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை மும்மணிநேர தியான ஆராதனை நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஈஸ்டர் பண்டிகைசிலுவையில் அறையப்பட்ட 3–வது நாளில் ஏசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.