தமிழ்புத்தாண்டையொட்டி விருத்தாசலம், நெய்வேலி பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழ்புத்தாண்டையொட்டி விருத்தாசலம், நெய்வேலி, பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
விருத்தாசலம்,
தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று காலை முதல் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பலர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலத்தில் மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று காலை 5 மணிக்கு சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. இதில் பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தமனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சித்தி விநாயகர் வெள்ளி காப்பு அலங்காரத்திலும், கொளஞ்சியப்பர் தங்க காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.
இதபோன்று விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.,
நெய்வேலிநெய்வேலி 16–வது வட்டத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தமிழ்புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு பூஜை நடந்து, உற்சவர் செம்பர் ஜோதிநாதர், அரம்வளர்த்த நாயகி ஆகியோர் குறுந்தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். மேலும் 63 நாயன்மார்களின் உருவ சிலைகளும் அலங்கரிக்கப்பட்டு வீதியுலாவாக எடுத்து செல்லப்பட்டது. இதற்கான பன்னிரு திருமுறை வளர்ச்சி கழகத்தினர் செய்திருந்தனர்.
இதேபோல் வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், 24–வது வட்டத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில், 28–வது வட்டத்தில் உள்ள விஷ்ணுபிரியா காளிக்கோவில், 29–வது வட்டம் காசிவிஷ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.