மதுரை ரெயில் நிலையத்தில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி 3 மாதத்துக்குள் முடியும் கட்டுமான பிரிவு என்ஜினீயர்கள் தகவல்
மதுரை ரெயில் நிலையத்தில் கூடுதலாக இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி 3 மாதத்திற்குள் முடிவடையும்
மதுரை,
மதுரை ரெயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் உள்ளன. இந்த பிளாட்பாரங்களுக்கு செல்வதற்கு ரெயில் நிலையத்தின் தகவல் மையம் அருகில் இரும்பு நடை மேம்பாலமும், பார்சல் அலுவலகம் அருகில் நடைமேம்பாலம் ஒன்றும் உள்ளது. இதில் தகவல் மையத்தின் அருகில் இருந்த இரும்பு நடைமேம்பாலம் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனால் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஒரேயொரு நடைமேம்பாலம் மட்டும் இருந்து வருகிறது. அந்த நடைமேம்பாலமும் ரெயில்நிலையத்தின் ஒரு மூலையில் இருப்பதால் வயதான பயணிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்காக நடைமேம்பாலத்தில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் பகல் மற்றும் இரவு நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் ஒரேநேரத்தில் நடைமேம்பாலத்தில் அனைத்து பயணிகளும் சென்று வருவதால் பல்வேறு சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
இரும்பு நடை மேம்பாலம்இந்த நிலையில், பழைய இரும்பு நடைமேம்பாலத்தை புதுப்பித்து கட்டும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அதன்படி, மதுரை ரெயில்நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் இருந்து 6–வது பிளாட்பாரம் வரை இரும்பு நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக தகவல் மையம், பயணிகள் சேவை மையம், பயணிகள் சாமான்கள் வைக்கும் அறை ஆகியன இடமாற்றம் செய்யப்பட உள்ளன. இதற்காக ரெயில்நிலைய நுழைவுவாயில் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இரும்பு நடை மேம்பாலம் இன்னும் 3 மாத காலத்திற்குள் கட்டிமுடிக்கப்படும் என்று கட்டுமான பிரிவு என்ஜினீயர்கள் தெரிவிக்கின்றனர்.