ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் தொடங்கியது
ஊட்டியில் நேற்று கோடை சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் தொடங்கியது. மின்னல் வேகத்தில் ஓடிய குதிரைகளை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனை முன்னிட்டு தமிழ் புத்தாண்டு அன்று குதிரை பந்தயம் தொடங்குவது வழக்கம். ஆங்கிலேயர்கள் காலம் முதல் நடத்தப்பட்டு வரும் இந்த குதிரை பந்தயத்தை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான குதிரை பந்தயம் நேற்று தொடங்கியது. இதில் நேற்று 8 பந்தயங்கள் நடைபெற்றன. இந்த குதிரை பந்தயம் வருகிற ஜூன் மாதம் 16–ந்தேதி வரை நடக்கிறது.
சுற்றுலா பயணிகள்பந்தயம் தொடங்கியதும் மின்னல் வேகத்தில் வெற்றி இலக்கை நோக்கி ஓடும் குதிரைகளை ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து சென்றனர்.
இந்த குதிரை பந்தயத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 500 குதிரைகள் பங்கேற்றுள்ளன. இதுதவிர 50 ஜாக்கிகள், 35 பயிற்சியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மொத்தம் 19 நாட்கள் இந்த பந்தயம் நடக்கிறது. மேலும் இதில் பரிசு தொகையாக ரூ.6.6 கோடி வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற நீலகிரி தங்க கோப்பைக்கான பந்தயம் வருகிற மே மாதம் 28–ந்தேதி நடக்கிறது.