சுருளி அருவிக்கு குவிந்த சுற்றுலா பயணிகள் தண்ணீர் வராததால் ஏமாற்றம்
தமிழ்ப்புத்தாண்டையொட்டி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் அருவியில் தண்ணீர் இல்லாததால் நீராட முடியாமல் ஏமாற்றுத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர்.
உத்தமபாளையம்
தேனி மாவட்டம் சுருளி அருவி மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய சுற்றுலாதலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மழை பெய்தால் நீர்வரத்து ஏற்படும். பருவமழை பொய்த்துப் போனதால் ஹைவேவிஸ் பகுதியில் உள்ள 7 ஏரிகளும் குறைந்த அளவு நீருடன் காட்சி அளிக்கிறது. இதனால் சுருளி அருவி நீர்வரத்து இன்றி காணப்படுகிறது.
தமிழ்ப்புத்தாண்டையொட்டி சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் மலையில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் தூவானம் ஏரியில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நேற்று மாலை 4 மணி வரை சுருளி அருவிக்கு நீர்வரத்து இல்லை.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்இந்த நிலையில் நேற்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவிக்கு குவிந்தனர். ஆனால் அருவியில் தண்ணீர் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள தோட்ட கிணறுகளுக்கு சென்று குளித்தனர். சிலர் அருவி பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் உள்ள நீரில் கை, கால்களை கழுவி சென்றனர். இன்னும் சிலர் பாறைகளின் ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீரை வாளியில் பிடித்து அருவியின் மேற்பகுதியில் இருந்து பக்தர்கள் மீது ஊற்றினர்.
அதன் பின்னர் பக்தர்கள் சுருளிவேலப்பர், விபூதி குகைக்கோவில், கைலாசநாதர் கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். நேற்று கம்பம் சுருளிவேலப்பர் கோவிலில் இருந்து சாமியை ஊர்வலமாக டிராக்டர் மூலம் அருவிக்கு கொண்டு வந்தனர். அங்கு தொட்டியில் இருந்த தண்ணீரை கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, ‘சுருளி அருவிக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நேற்று முன்தினம் மாலையிலேயே தூவானம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தூவானம் ஏரி, சுருளி அருவியில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் அடர்ந்த மலைப்பகுதி வழியாக தான் அருவிக்கு வரவேண்டும். எனவே திறக்கப்பட்ட தண்ணீர் உரிய நேரத்தில் அருவிக்கு வரவில்லை’ என்றனர்.
தண்ணீர் இல்லாத போதும் அருவியில் குளிக்க ரூ.5 கட்டணம் வசூல்
சுருளி அருவியில் குளிப்பதற்கு முன்பெல்லாம் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருவி பகுதியை சுத்தமாக வைக்க, அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் நபருக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நேற்று சுருளி அருவி நீர்வரத்து இன்றி வறண்டு போய் இருந்தது. ஆனால் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளிடம் ரூ.5 கட்டணத்தை வனத்துறையினர் வசூலித்தனர். இதற்கு சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அருவியில் விழாக் காலங்களில் கட்டணம் வசூல் செய்ய கூடாது என்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த கூட்டத்தில் வனத்துறையினர் உறுதி அளித்தும், நேற்று கட்டணம் வசூல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.