தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 15 April 2017 12:40 AM IST (Updated: 15 April 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சி கால அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பகலில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு கோவில் உள்பிரகாரத்தில் கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. கனி காணும் நிகழ்ச்சியை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

புனித நீராடி தரிசனம்

தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்து இரவு வரையில் குடும்பத்துடன் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் சுவாமியை வழிபட்டனர். கோவில் கலையரங்கில் கோவில் பொது விவர குறிப்பேடு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. பொது விவர குறிப்பேட்டின் முதல் பிரதியை கோவில் அலுவலக கண்காணிப்பாளர் சுப்பையன் வெளியிட்டார். அதை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் கதிரேசன் பெற்றுக்கொண்டார்.

மேலும் புத்தாண்டை முன்னிட்டு கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story