புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வால்பாறை
வால்பாறை வட்டார பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை புனித வனத்து சின்னப்பர் தேவாலயத்தில் அமைந்துள்ள புனித சிலுவைமலையில் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
வால்பாறை சுற்று வட்டார பகுதி கிறிஸ்தவர்கள், பொள்ளாச்சி, கோவை, உடுமலை, திருப்பூர், கேரள மாநிலம் சாலக்குடி ஆகிய இடங்களில் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலுவைகளை சுமந்துகொண்டு சிலுவை மலையில் சிலுவைப்பாதை வழிபாடு நடத்தினர். 14 இடங்களில் ஜெப வழிபாடு நடைபெற்றது.
தியானம்அதேபோல் முடீஸ் புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சொந்தமான சோலையார் புனித சிலுவை மலையில் 84–வது ஆண்டாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் இணைந்து புனித சிலுவை மலையில் சிலுவைப்பாதை தியானம் நடத்தினார்கள். சிலுவைப்பாதையின் முடிவில் அனைவருக்கும் பரிகார கஞ்சி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆலயத்தில் திருச்சிலுவை ஆராதனை, இயேசுவின் சிலுவைபாடுகளின் தியானம் ஆகியவை நடைபெற்றது. வால்பாறை புனித லூக்கா தேவாலயத்தில் பக்தர்கள் ஆலயத்தில் இருந்து ஸ்டேன்மோர் எஸ்டேட் மாதா சந்திப்பு வரை சிலுவைப்பாடுகளை தியானித்து கொண்டு பாதை யாத்தியை சென்றனர்.