திருப்பூரில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிலுவைபாதை ஊர்வலம்
திருப்பூரில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கருதி சிலுவை பாதை ஊர்வலம் வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று திருப்பூரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிலுவைபாதை, இறைவாக்கு வழிபாடுகள் நடைபெற்றன. திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்தரீன் ஆலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. அப்போது சிலுவையை சுமந்து கொண்டு தேவாலயத்தை சுற்றி வந்தனர். ஆலையத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த 14 சிலுவை பாதை ஸ்தலத்திலும் ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணி வரை திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல திருப்பூர் சபாபதிபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. அருள்நாதர் ஆலயத்தில் காலை 11 மணி முதல் சிலுவைபாதை ஊர்வலம், ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் மதியம் 3 மணிவரை நடைபெற்றது. இதில் சிறப்பு நற்செய்தியாளர்கள் கலந்து கொண்டு புனித வெள்ளியின் சிறப்பு குறித்து பேசினார்கள். முடிவில் அனைவருக்கும் உபவாச கஞ்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சபை மக்கள் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சி.எஸ்.ஐ.தூயபவுல் ஆலயம்திருப்பூர்–அவினாசி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி, காலை 11 மணிக்கு சிலுவை பாதை மற்றும் மும்மணி தியான ஆராதனை தொடங்கி மதியம் 3 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு ஆங்கிலத்தில் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் புனித சூசையப்பர் ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி நேற்று காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆராதனை நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு சிலுவை பாதை ஊர்வலம், இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உபவாச கஞ்சி வழங்கப்பட்டது.
இதே போல திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிலுவை பாதை ஊர்வலம் மற்றும் ஆராதனை நடைபெற்றன.