கன்னியாகுமரி கடலில் இன்று முதல் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை


கன்னியாகுமரி கடலில் இன்று முதல் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை
x
தினத்தந்தி 15 April 2017 4:00 AM IST (Updated: 15 April 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கடலில் இன்று முதல் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதம் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கும் செய்யும் காலம் ஆகும். இந்த காலங்களில் விசைப்படகுகள், மீன்பிடி படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிப்பதால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து மீன் இனம் அழியும் நிலை ஏற்படும்.

எனவே இதனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15–ந் தேதி முதல் மே மாதம் 29–ந் தேதிவரை 45 நாட்கள் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை விசைப்படகுகள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுவது வழக்கம்.

அமலுக்கு வருகிறது

இந்த தடைக்காலம் இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதனால் கன்னியாகுமரி மீனவர்கள், விசைப்படகில் உள்ள பழுதுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வர்ணம் பூசும் பணியும் நடக்கிறது. மீன்பிடி தடைகாலம் விசைப்படகுகளுக்கு மட்டும் தான். கட்டுமரம், வள்ளம் போன்றவற்றில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

இதற்கிடையே மீனவர்களின் தடைக்காலத்தை 60 நாட்களாக நீட்டித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தீபா கூறுகையில், தமிழகத்தின் நடைமுறைப்படி மீனவர்களின் தடைக்காலம் தற்போது 45 நாட்களாகத் தான் உள்ளது. அதனை மத்திய அரசு மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனை அமல்படுத்த வேண்டுமா? என்பது குறித்து விசைப்படகு மீனவர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story