டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 April 2017 4:30 AM IST (Updated: 15 April 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பெரம்பலூர் நகரில் தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த 8 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும் அந்த கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பெரம்பலூர் அருகே அருமடல் பிரிவு சாலையிலும், கவுல்பாளையம் கிராம குடியிருப்பு பகுதி அருகேயும் உள்பட அப்பகுதியில் மொத்தம் 3 டாஸ்மாக் கடைகளை புதிதாக திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், டாஸ்மாக் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர்–அரியலூர் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் பிடித்தபடி சாலையில் அமர்ந்து கோ‌ஷமிட்டனர்.

 இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு மதுக்கடைகளை திறக்கமாட்டோம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story