அரசு டாக்டர்கள், பொதுமக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க வேண்டும்


அரசு டாக்டர்கள், பொதுமக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 April 2017 4:45 AM IST (Updated: 15 April 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள், பொதுமக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் கூறினார்.

புதுக்கோட்டை

பொது சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து சுகாதார திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, ஆய்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட நலச்சங்கம், குடும்ப நல அறுவை சிகிச்சை தர நிர்ணயம், தனியார் மருத்துவமனைகள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்திட அங்கீகாரம் வழங்குதல், அரசு அலுவலர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், நோயாளர் நலச்சங்கம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச்சங்கம், ரத்த வங்கி செயல்பாடு, காசநோய் திட்டம், சித்த மருத்துவம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;–

ஆலோசனைகள் வழங்க வேண்டும்

குடும்ப கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கை மையத்தின் மூலம் தொடர் மருத்துவ ஆலோசனைகள் வழங்க வேண்டும். நோயாளிகளுக்கு காசநோய் மற்றும் கண் பரிசோதனை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்து எடுத்துரைக்க வேண்டும். தேவைப்படும் நபர்களுக்கு அரசு ரத்த வங்கியில் ரத்தம் பெற்று செலுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் பழுதுபார்த்தல், குடிநீர்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு டாக்டர்கள், பொதுமக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இணை இயக்குனர் (பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்) சுரேஷ்குமார், துணை இயக்குனர் பரணீதரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story