தொழில் தொடங்குவதற்காக மானியத்தில் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது


தொழில் தொடங்குவதற்காக மானியத்தில் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
x
தினத்தந்தி 15 April 2017 4:45 AM IST (Updated: 15 April 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

தொழில் தொடங்குவதற்காக மானியத்தில் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்

கரூர்,

தொழில் தொடங்க மானியத்தில் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கூறியுள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

தொழில் தொடங்க மானியம்

வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று தொழில் தொடங்குவதற்காக மானியத்தில் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வங்கியில் கடன் வழங்கப்படுகிறது. அதேபோன்று சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சம், வியாபார தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் அதிகபட்சம் 35 வயதிற்குள்ளும், மற்றவர்கள் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1½ லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பில் 10 சதவீதமும், சிறப்புப்பிரிவினர் 5 சதவீதமும் பங்களிப்பு தொகை கட்ட வேண்டும். மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சத்தியமூர்த்தி நகர், கரூர் என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின்கீழ் ஆயத்த ஆடைகள் தயாரித்தல், பாக்குமட்டை தட்டு தயாரித்தல், டிஜிட்டல் பிரிண்டிங், காலணி தயாரிப்பு, ஹாலோ பிளாக்குகள் தயாரித்தல், லேத் தொழில், லேபிள் பிரிண்டிங், கோன் வைண்டிங், வலைதள மையம், பவர்லூம், போட்டோ பிரேம் வேலைப்பாடுகள், உணவகம், தையல் நிலையம், வீடியோ கவரேஜ்– போட்டோ ஸ்டுடியோ, அழகு நிலையம், மரவேலைப்பாடுகள், பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல், வாடகை கார், கைபேசி பழுதுநீக்கம், மளிகைக்கடை, உலர்மாவு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களுக்கு மனுதாரர் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story