புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல்


புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 15 April 2017 4:00 AM IST (Updated: 15 April 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி உறையூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதன்படி திருச்சி மாவட்டத்தில் 119 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய இடத்தில் அந்த கடைகளை திறப்பதற்கு அரசு சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு பகுதிகளில் புதிய கடைகள் தொடங்குவதற்கு பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் திருச்சி உறையூர் அரவானூர் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறப்பதற்காக ஒரு கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு மது பாட்டில்கள் இறக்கி வைக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அரவானூர் பகுதி பொதுமக்கள் மற்றும் திருச்சி மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று மதியம் 12 மணிக்கு முன்பாக டாஸ்மாக் கடையின் முன்பு 50–க்கும் மேற்பட்டோர் கூடினர்.

சாலை மறியல்

அப்போது கடை திறப்பதற்காக ஊழியர்கள் அங்கு வந்தனர். பொதுமக்கள் ஊழியர்களிடம் கடையை திறக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் ஊழியர்கள் கடை திறக்காமலேயே அங்கிருந்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த உறையூர் போலீசாரும், திருச்சி (மேற்கு) வருவாய் ஆய்வாளர் சுரேஷ், பாண்டமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அவர்கள் இந்தப்பகுதியில் புதிதாக திறக்க உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் சரக போலீஸ் நிலைய உதவி கமி‌ஷனர் ஸ்ரீதர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பொதுமக்களிடம் இந்த டாஸ்மாக் கடையை திறக்கப்படாது என்றும், நாளை மறுநாளுக்குள் (திங்கட்கிழமை) கடையின் உள்ளே இருக்கும் மது பாட்டில்கள் எடுக்கப்படும் என்று கூறினார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 2 மணி நேரமாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.


Next Story