அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது கவர்னர் மாளிகை முன்பு மாணவர்கள் போராட்டம்


அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது கவர்னர் மாளிகை முன்பு மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 April 2017 4:00 AM IST (Updated: 15 April 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்ற மாணவர்கள் கவர்னர் மாளிகை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

அம்பேத்கர் பிறந்ததினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தவைவர்கள், சமூக அமைப்பினர், மாணவர் அமைப்பினர் சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கரின் சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர்.

மாணவர் கூட்டமைப்பினர் கடற்கரை சாலையில் இருந்து சிலைக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மாணவர் கூட்டமைப்பின் நிறுவனர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.

கவர்னருக்கு எதிராக கோ‌ஷம்

ஊர்வலம் கவர்னர் மாளிகை முன்பு வந்தபோது ஊர்வலத்தில் வந்தவர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டு கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி வரை இலவச கல்வி அளிக்கும் கோப்பில் கையெழுத்து போடாத கவர்னரே வெளியேறு என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள். சிலர் சாலையிலும் அமர்ந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இருந்தும் தொடர்ச்சியாக முயற்சி எடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன்பின் மாணவர் கூட்டமைப்பினர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story