புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: பூட்டு போட்டு பூட்டி மறியல்
புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை பூட்டு போட்டு பூட்டியதுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வில்லியனூர்,
பத்துக்கண்ணு–கூடப்பாக்கம் சந்திப்பில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை பூட்டு போட்டு பூட்டியதுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் அருகில் மதுக்கடைதேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு விட்டது. அதன்படி புதுவை நெடுஞ்சாலையில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்தநிலையில் அந்த கடைகளை வேறு இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல் புதுவை நகர பகுதியில் இயங்கி வந்த மதுக்கடை மூடப்பட்டதற்கு பதில் பத்துக்கண்ணு–கூடப்பாக்கம் சந்திப்பில் நாகத்தமன் கோவில் அருகே அந்த மதுக்கடையை அமைக்க ஏற்பாடுகள் நடந்தன.
கடையை பூட்டினர்இதையொட்டி மதுக்கடை திறக்க அங்கு நேற்று காலை பூஜை நடந்தது. இதுபற்றி அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த மதுக் கடையின் முன்பு திரண்டு வந்தனர். அங்கு மதுக்கடை திறக்க கூடாது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சில இளைஞர்கள் கடையின் கதவை இழுத்து பூட்டி, கடையில் இருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். திடீரென்று அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வில்லியனூர் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கலால் துறையிடம் அனுமதி பெற்றே மதுக்கடை திறக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் கிராம மக்கள் அதனை ஏற்கவில்லை. அதனைதொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது. கிராம மக்களும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.