ரெயிலுக்காக காத்து நின்ற பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு 4 பேர் கைது


ரெயிலுக்காக காத்து நின்ற பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 April 2017 5:27 AM IST (Updated: 15 April 2017 5:27 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலுக்காக காத்து நின்ற பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நகை, பணம் இருந்த பையை திருடி சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சிதா (வயது 25). இவர் கடந்த புதன்கிழமை மகன் ஷோகமுடன் (5) சர்ச்கேட் செல்ல பாந்திரா ரெயில் நிலையம் வந்தார். மதியம் 11.45 மணியளவில் 5-வது பிளாட்பாரத்தில் விரைவு ரெயிலுக்காக காத்து நின்றார். அப்போது ஷோகம் திடீரென பிளாட்பாரத்தில் ஓடினான். எனவே சஞ்சிதா மகனை பிடிக்க பின்தொடர்ந்து சென்றார். அவர் மகனுடன் திரும்பி வந்த போது அவர் பிளாட்பாரத்தில் வைத்திருந்த தோள் பை மாயமாகி இருந்தது. அந்த பையில் ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.42 ஆயிரம் மதிப்பிலான நகைகள் இருந்தது.

4 பேர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சிதா சம்பவம் குறித்து பாந்திரா ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது சஞ்சிதாவின் பையை எடுத்துக்கொண்டு ஒரு கும்பல் ரெயில்நிலையத்தின் கிழக்குப்பகுதி நோக்கி சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அங்கு ஒரு கும்பல் தோள் பையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தான் சஞ்சிதாவின் பையை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர்களின் பெயர்கள் அல்டாப்கான் (45), அப்துல்சேக் (30), ராஜூ (28), கோபால் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் மீதமுள்ள பணம், நகையுடன் தப்பிய 5-வது திருடனையும் தேடி வருகின்றனர். 

Next Story