காட்டிற்குள் கற்றுக் கொண்ட இயற்பியல் பாடம்..!


காட்டிற்குள் கற்றுக் கொண்ட இயற்பியல் பாடம்..!
x
தினத்தந்தி 15 April 2017 2:50 PM IST (Updated: 15 April 2017 2:50 PM IST)
t-max-icont-min-icon

அபர்ணா புருஷோத்தமன் கேரளாவை சேர்ந்த இயற்பியல் ஆராய்ச்சியாளர். கேரளாவின் கோட்டயம் பகுதியில் இயங்கும் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

பர்ணா புருஷோத்தமன் கேரளாவை சேர்ந்த இயற்பியல் ஆராய்ச்சியாளர். கேரளாவின் கோட்டயம் பகுதியில் இயங்கும் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றுகிறார். இயற்பியல் பாடத்தில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது..? என்று சலித்துக்கொள்ளும் மாணவர்களுக்கு அபர்ணா பிரத்யேக பயிற்றுமுறையை கையாள்கிறார். அதாவது... கேரள பகுதிகளில் இருக்கும் மழைக்காடுகளுக்கு மாணவர்களை அழைத்து செல்வதுடன்... அங்கிருக்கும் சூழலை அடிப்படையாக கொண்டு இயற்பியல் பாடம் நடத்துகிறார்.

‘இயற்கை காடுகளுக்கும், இயற்பியலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா...?’ என்ற சந்தேகம் அபர்ணாவிடம் அதிகமாக பேச வைத்தது. அதற்கு அவர், விளக்கமாக பதிலளிக்கிறார். ‘‘பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதை மரங்களின் மடியில் தான் கண்டுபிடித்தோம். மலை முகடுகள் ஒலி எதிரொலிப்பை கேட்க வைத்தன. அதிர்வுகளை உணர்ந்து கொள்ளும் சக்தியை டால்பின்களும், சுறாக்களும் கற்றுக்கொடுத்தன. இப்படி இயற்பியலின் எல்லா இயக்கத்திலும் இயற்கை ஒளிந்திருக்கிறது.




இயற்கையுடன் ஒளிந்திருக்கும் வி‌ஷயத்தை தான் இயற்பியல் விதிகளாகவும், பாடப்புத்தகமாகவும் எழுதியிருக்கிறோம். அதை வெறும் பாட வரிகளாக இல்லாமல், இயற்கையின் வழிநின்று படித்தால் இயற்பியல் பாடம் நிச்சயம் இனிக்கும்’’ என்ற அபர்ணாவின் விளக்கம்... பிரமிப்பாக இருந்தது. இவர் இயற்பியல் ஆசிரியர் மட்டுமல்ல.... ஒரு இயற்கை ஆசிரியரும் கூட. அதனால் தான் மழைக்காடுகளுக்குள் செல்லும்போது கையில் புகைப்பட கேமராவையும் எடுத்து செல்கிறார்.

‘‘முதலில் பேராசிரியை. பிறகு தான் புகைப்பட கலைஞர். புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பாம்புகள் பறப்பதையும், நீரில் இருந்து மீன்கள் விண்ணை நோக்கி குதிப்பதையும் பார்த்து ரசித்ததோடு... அதை கேமராக்களிலும் படம் பிடித்து வருகிறேன். இத்தகைய காட்சிகளை இயற்பியல் பாடரீதியிலும், இயற்கை அதிசயங்களின் பார்வையிலும் ரசிக்க முடிந்தது. இத்தகைய தேடல் என்னை சிறந்த புகைப்பட கலைஞராகவும் மாற்றி இருக்கிறது. காட்டிற்குள் மறைந்திருக்கும் இயற்பியல் கோட்பாடுகளை தேடுகையில்... இதுபோன்ற தருணங்களையும் தேடுகிறேன். ஐன்ஸ்டீனின் கருத்துப்படி ஒரே கல்லில் இரண்டு ஆப்பிள்கள்’’ என்பவர்... புகைப்பட துறையிலும் ஜொலிக்கிறார். குறிப்பாக வனவிலங்கு புகைப்படங்களை தத்ரூபமாக படம்பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.



‘‘இயற்பியலையும், இயற்கையையும் நேசிக்க கற்றுக்கொண்டால்... மழைக் காடுகள் சொர்க்கபுரியாக திகழும். காட்டிற்குள் நிகழும் ஒவ்வொரு மாற்றத்தையும் மனதார உணர முடியும். ஏன்...! மரங்களின் மூச்சு காற்றையும் உணர முடியும். இந்த பாடத்தையே முதன்மை பாடமாக சொல்லிக் கொடுக்கிறேன். ‘அறிவியல்’, ‘கணிதம்’ என்றாலே தலைத்தெறித்து ஓடும் மாணவர்களை தேடிப்பிடித்து அறிவியலின் மேன்மையை உணர்த்துவது தான் என்னுடைய பணி. அதை என்னுடைய ஸ்டைலில் நிச்சயம் செய்து காட்டுவேன்’’ என கேமராவும் கையுமாக கிளம்பு கிறார், அபர்ணா. பள்ளி–கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டாலும், மாணவ–மாணவிகள்... இயற்கை பாடம் படிக்க அபர்ணாவுடன் காட்டிற்குள் சென்று வருகிறார்கள்.


Next Story