கல்வி ஒளிவீசும் ‘நிலவொளி பள்ளி’..!


கல்வி ஒளிவீசும்  ‘நிலவொளி பள்ளி’..!
x
தினத்தந்தி 15 April 2017 3:28 PM IST (Updated: 15 April 2017 3:31 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தில் இயங்கும் பள்ளிகள், இரவு நேரத்திலும் கல்வி ஒளி வீசுகின்றன. இளம்வயதில் பள்ளி வாழ்க்கையை தொலைத்தவர்கள் இந்த இரவுப் பள்ளியில் சிறப்பு பாடம் படிக்கிறார்கள்.

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தில் இயங்கும் பள்ளிகள், இரவு நேரத்திலும் கல்வி ஒளி வீசுகின்றன. இளம்வயதில் பள்ளி வாழ்க்கையை தொலைத்தவர்கள் இந்த இரவுப் பள்ளியில் சிறப்பு பாடம் படிக்கிறார்கள். கல்லாமை என்ற இருளை விரட்டி பிரகாசமாக ஒளிவீசிக்கொண்டிருக்கும் இதற்கு ‘நிலவொளி பள்ளி’ என்று பெயர். 1997 முதல் 1999–ம் ஆண்டு வரை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய இறையன்பு ஏற்றி வைத்த இந்த கல்வி ஒளி... பலருக்கு வாழ்வொளியாக மாறியிருக்கிறது.

‘‘பல பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்ட காஞ்சீபுரம் மாவட்டம்  என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனெனில்  குழந்தைத் தொழிலாளர் முறை காஞ்சீபுரம் முழுவதும் பரவியிருந்தது. ஒப்பந்த முறையில் பணம் வாங்கிக் கொண்டு குழந்தைகளை கொத்தடிமைகளாக நெசவுத்தறி நெய்யும் பட்டறைக்கு வேலைக்கு அனுப்பி விடுவார்கள். பாட நூல்களை படிக்க வேண்டிய வயதில், பிணைக்கைதிகளாக நெசவு நூல்களை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த தருணத்தில் ஒரு மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு குழந்தைகளை மீட்டு வந்தேன். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஊக்கத் தொகையுடன் அரசு  பள்ளியில் படிக்க வைத்தேன். ஆனால் அந்த வயதை கடந்தவர்கள் ஏராளமாக இருந்தனர். அவர்களும் கல்வி கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்றப்பட்ட ஒளி தான், இந்த நிலவொளி’’ என பிரகாசமாக ஒளிர்விடும் இரவு பள்ளிக்கான முன்கதையை கூறினார், இறையன்பு. மேலும் தொடர்ந்தவர்...

‘‘நிலவொளி பள்ளியை முதன்முதலில் பிள்ளையார்பாளையத்தில் தான் தொடங்கினோம். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்தார்கள். அவர்களுடைய கல்வித் தரத்திற்கேற்ப அவர்களை வகைப்படுத்தி ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு எனப் பிரித்து பாடங்களைக் கற்பித்தோம். அவர்களுக்குத் தேர்வு எழுத சிறப்பு அனுமதியை கல்வித்துறை வழங்கியது. பிள்ளையார்பாளையத்தில் போடப்பட்ட அந்தப் பிள்ளையார் சுழி தொடர்ந்து பல இடங்களில் நிலவொளிப் பள்ளியைத் தொடங்க வித்திட்டது. தறியில் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல, அப்பளத் தொழிலில் ஈடுபட்டு நொறுங்கி போனவர்களின் கல்வியையும் சீரமைக்க முடிந்தது’’ என்று பொறுப்பாக பேசினார்.

இவரது வழிகாட்டுதலும், ஒளிர்வூட்டுதலும் நிலவொளி பள்ளி மாணவர்களை அரசு அதிகாரிகளாக மாற்றியிருக்கிறது. வாழ்க்கையில் சாதித்துக் காட்டியவர்கள் எல்லாம் சமீபத்தில் ஒன்றுகூடி, இறையன்புவிற்கு நன்றி பாராட்டுதல் விழாவை நடத்தினார்கள். அதில் கலந்துகொண்ட இறையன்பு, மாணவர்களின் அன்பை நினைத்து மனம்நெகிழ்ந்தார். அந்த தருணத்தில் நிலவொளி பள்ளியின் கூடுதல் தகவல்களை கேட்டோம்...

* எவ்வளவு நேரம் பள்ளி இயங்குகிறது? ஓய்வு நேரத்தில் இயங்கும் பள்ளிக்கு விடுமுறை இருக்கிறதா?

‘‘மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இப்பள்ளிகள் இயங்கும். அந்தந்தப் பள்ளியின் சூழலுக்கேற்ப விடுமுறைகள் வழங்கப்படும். தன்னார்வத் தொண்டர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். கல்வி கற்பதில் ஆர்வமிருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த பள்ளியில் சேரலாம்’’

*பாடம் கற்பிக்கும் முறை, தேர்வு முறை, ஆசிரியர்கள் பற்றி விளக்கமாகக் கூறுங்கள்?

‘‘ஆசிரியர்கள் என்று சொல்வதைவிட வழிகாட்டிகள் என்றே கூற வேண்டும். மாணவர் களுக்கு எப்படி வாசிக்க வேண்டும் என்கிற பயிற்சியை அவர்கள் அளித்து வருகிறார்கள். மாணவர்களும் சுயமாகத் தேடி பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிக விளக்கங்கள் தேவைப்படும் நேரங்களில் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தி தெளிவுபெறுகிறார்கள். படித்த பல பட்டதாரி இளைஞர்கள் குறைந்த ஊதியத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருகிறார்கள். சகமாணவர்களிடம் விவாதிப்பதன் மூலமும், கலந்துரையாடுவதன் மூலமும் கல்வி தரத்தை தங்களுக்குள்ளாக மேம்படுத்தி தேர்வுக்குத் தயாராகுகிறார்கள்’’

* நிலவொளிப் பள்ளியில் ஆசிரியராகப் பாடம் சொல்லிக் கொடுத்த அனுபவம் இருக்கிறதா?

‘‘மாலை நேரங்களில் நிலவொளிப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து சென்று மாணவர்களை உற்சாகப்படுத்தி வந்தேன். முறையாகப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைவிட அவர் களின் எழுத்து அழகாக இருந்தது. கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அதிகமாக இருந்தது. டெல்லியிலிருந்து வந்திருந்த உயர் அதிகாரிகள் கூட மாணவர்களுடைய உற்சாகத்தைப் பார்த்து அசந்துபோனார்கள். சரித்திரப் பாடங்கள் சிலவற்றை அவர்களுக்குக் கதையாகவே சொல்லியிருக்கிறேன். சோர்வு வருகிறபோதெல்லாம் நிலவொளிப் பள்ளிக்குச் சென்றால் போதும், களைப்பு நீங்கிவிடும்’’

*நிலவொளிப் பள்ளியின் கல்வி முறை ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?

‘‘இதற்கான சிறப்பு அனுமதியை கல்வித்துறை வழங்கியிருக்கிறது. இங்கே படித்தவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். அவ்வாறு வெற்றிபெற்ற பலர் உயர்ந்த பணிகளில் அமர்ந்திருக் கிறார்கள்’’

*நிலவொளியின் வெளிச்சத்தில் பயன்பெற்றவர்களைப் பற்றிக் கூறுங்கள்?

‘‘பல மாணவர்கள் நிலவொளிப் பள்ளியில் படித்து பிளஸ்–2 தேர்வில் வெற்றி பெற்றிருக் கிறார்கள். அதில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து படித்து இளங்கலைப் பட்டங்களையும், நிறைகலைப் பட்டங்களையும் பெற்றிருக் கிறார்கள். இன்னும் சிலர் படிப்பதை நிறுத்தாமல் ஏதேனும் ஒரு படிப்பை மேற்கொண்டு வரு கிறார்கள். தணியாத ஆர்வத்தின் காரணமாக பணி கிடைத்த பிறகும் அவர்கள் படிப்பதை நிறுத்துவதில்லை. அவர்களிடம் அசாத்தியமான தன்னம்பிக்கையும், நேர்மையாக இருக்க வேண்டும் என்கிற பண்பும் வெளிப்படுகிறது. படிக்க வாய்ப்பில்லாமல் இருப்பவர்களை அழைத்துவந்து இங்கு சேர்க்கிறார்கள். தங்களுடைய பணியில் சமூக அக்கறையோடு செயல்படு கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த சமூகமும் சொட்டுநீர் பாசனம்போல் பயனடைந்து வருகிறது’’

*   கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பள்ளிக்கு சிறப்பு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளனவா?


‘‘நான் பணியாற்றியபோது ஆண்டுவிழாக்கள் நடத்தி கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை இடம்பெறச் செய்து மாணவர்களை மகிழ்ச்சிபெறச் செய்தோம். அவர்களுக்குள் இணக்கமும், பணியில் ஏற்படும் அயர்ச்சியிலிருந்து இளைப்பாறுதலும் ஏற்பட அவை உதவியாக இருந்தன. அவை தொடரும் என எதிர்பார்க்கிறேன்’’

*நிலவொளிப் பள்ளியில் டியூசன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றனவா?

‘‘இல்லை. சுய தேடலே இங்கு முன்னுரிமை பெறுகிறது’’

*இந்தத் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தினால், வேலைக்குச் செல்பவர் களும் பயன்பெறலாம்... இதைப்பற்றி உங்களது கருத்து?


‘‘ஏற்கனவே பள்ளிகளில் இருக்கும் கட்டமைப்பை மின்விளக்குகளோடும், மின்விசிறி களோடும் பயன்படுத்திக்கொள்வது இத்திட்டத்தின் நோக்கம். புதிய கட்டிடங்கள் தேவையில்லை. தன்னார்வ ஆசிரியர்களும், மாணவர் களுமே இந்த இயக்கத்தின் முதுகெலும்பு. இதுபோன்ற பள்ளிகள் திறக்கப்பட்டால், நிதிவசதி செய்ய எண்ணற்றோர் தயாராக இருக்கிறார்கள். சமீபத்தில் கூட... மன்னடி முருகன் என்ற கைத்தறி தொழிலாளி ரூ.25 ஆயிரம் கொடுத்து நிலவொளி பள்ளியின் வளர்ச்சிக்கு உதவினார். இதுபோன்ற ஏராளமான உதவும் உள்ளங்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். இத்தகைய முயற்சியை முன்னெடுப்பவர்களே தேவைப்படுகிறார்கள்’’

*வேறு இடங்களில் நிலவொளிப் பள்ளி அமைக்கும் முயற்சி நடந்ததா?

‘‘முத்துப்பேட்டையில் 2004–ம் ஆண்டு இந்த முயற்சி நடந்தது. நிலவொளி என்கின்ற இதழையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். எல்லா இடங்களிலும் சுகாதாரம், நற்பண்புகள், வாழ்வியல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் நிலவொளிப் பள்ளிகளைக் கட்டமைக்க வாய்ப்பு இருப்பதாகவே தோன்று கிறது’’

*காஞ்சீபுரத்திலிருந்து வந்த பிறகும் நிலவொளிப் பள்ளிகளோடு தொடர்பு இருக்கிறதா?

‘‘நிலவொளிப் பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் முக்கியமான நாட்களுக்கு அஞ்சலட்டையில் வாழ்த்துகளை எழுதி அனுப்புவார்கள். நான் அவர்களுக்கு கைப்பட வாழ்த்து அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை நிலவொளிப்பள்ளிகளுக்கு மின்கட்டணம் செலுத்த வசதியில்லை என்ற கடிதம் வந்தது. தஞ்சாவூரைச் சார்ந்த கோவிந்தராஜன் என்கிற நண்பர் ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகையாகக் கொடுத்தார். கவிதாசன் என்கிற நண்பர் ஆண்டு தோறும் ஐம்பதாயிரம் ரூபாய் அனுப்பி வரு கிறார். என்னுடைய சில புத்தகங்களுக்குக் கிடைக்கும் உரிமத் தொகையை நிலவொளிப் பள்ளிக்கு அளித்து வருகிறேன். காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு கண்காணிப்பு அலுவலராக இருந்தபோது இந்தப் பள்ளிகளை இரவு நேரத்தில் பார்வையிடுவேன். இப்போது அந்த இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்று புதுநம்பிக்கை கொடுக்கிறார்.

அன்பால் நெய்த பட்டுமாலை..!

நிலவொளி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பட்டு நூலால் தங்கள் கைப்படவே வடிவமைத்த மாலையை இறையன்புவிற்கு அணிவித்தார்கள்.

‘‘நெசவுப் பட்டறை எங்கள் வாழ்க்கையாக இருந்த போது அதிலிருந்து மீட்டு வந்து எங்களை அரசு அதிகாரிகளாக உயர்த்தியிருப்பவருக்கு நாங்கள் சூட்டும் பட்டு மாலை இது’’ என்று அவர்கள் சொல்லியபோது அனைவரும் பெருமிதம் அடைந்தார்கள்.


அம்மாவும், மகனும்....

‘‘1995 காலகட்டத்தில் கிராமத்து பெண்கள் படிப்பதே ஆச்சரியம் தான். அப்படி பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் அப்பாவின் கட்டாயத்தால் திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய மகன் நன்றாக படிக்க ஆரம்பித்தான். அவனுடைய கல்வி ஆர்வம் என்னையும் படிக்க தூண்டியது. உடனே இறையன்பு சார் தொடங்கிய நிலவொளி பள்ளியில் 2012–ல் சேர்ந்தேன். இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை வகுப்பு நடந்தது. நான் பிளஸ்–2 தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய மகனும், நானும் ஒன்றாக பிளஸ்–2 தேர்வு எழுதும் ஆச்சரியமும் நிகழ்ந்தது. அதில் மகனை விட நான் அதிக மதிப்பெண் பெற்றேன். அப்படியே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி இப்போது தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வருகிறேன்’’  –கலைச்செல்வி.

சமூக நிலை மாறியது..!

‘‘நான் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி. அப்போது எனக்கு 18 வயது. நிலவொளி பள்ளியில் பாடம் படிக்க ஆரம்பித்ததில் இருந்து என்னுடைய வாழ்க்கையே மாற ஆரம்பித்தது. இப்போது சென்னையில் இயங்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உதவிப் பிரிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறேன். எல்லாவற்றுக்கு காரணம், இறையன்பு சார் தான்’’ என்று உணர்ச்சி பொங்க பேசும், மாதவன் குரூப்–4 தேர்வில் இரண்டு முறையும் குரூப்–2 தேர்வில்  மூன்று முறையும், வி.ஏ.ஓ.தேர்வில் ஒருமுறையும் மத்திய அரசின் வங்கித் தேர்வில் ஒருமுறையும் என மொத்தம் ஏழு அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.

Next Story