ராமநாதபுரத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2.52 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்


ராமநாதபுரத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2.52 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 15 April 2017 6:58 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2.52 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு 157 பயனாளிகளுக்கு ரூ.2.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:– தமிழக அரசு பொதுமக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம், விவசாயிகள் நலன் காக்கும் விதமாக பயிர்கடன் வழங்கும் திட்டம், தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் மாணவ–மாணவிகள் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குடிநீர் பற்றாக்குறை

தற்போதைய வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் கூடுதல் குடிநீர் ஆதாரங்களுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து ரூ.12.77 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதை தலையாய பணியாக கொண்டு பணியாற்ற வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு, அந்த பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேபோல டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசுப்புழு ஒழிக்கும் பணிகள், சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக பராமரித்திட வேண்டும்.

வேலை வாய்ப்பு

மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் தொடர்ந்து இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முத்தையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, ராம்கோ தலைவர் முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிறைகுளத்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story