மாவட்டம் முழுவதும் ரூ.22¾ கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் தங்கமணி தகவல்


மாவட்டம் முழுவதும் ரூ.22¾ கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் தங்கமணி தகவல்
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 15 April 2017 7:41 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.22 கோடியே 75 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டப் பணிகள்

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வறட்சி மற்றும் குடிநீர் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, அரசு முதன்மை செயலாளர் சத்யகோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் தீரஜ்குமார், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன்,பொன்.சரஸ்வதி, கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:–

நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைந்து விட்ட காரணத்தால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனை போக்கி பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னுரிமை கொடுக்க வேண்டும்

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வறட்சி மற்றும் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்கு ஏறத்தாழ ரூ.100 கோடி நிதியினை ஒதுக்கி உள்ளதோடு, மாவட்டம் தோறும் அமைச்சர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, குடிநீர் தேவை குறித்து விவர அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிட்டு இருந்தார். அந்த அடிப்படையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் மக்களுக்கான குடிநீர் தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தேவைகளுக்கு என நிறைவேற்றப்படும் திட்டங்களில் நீர் ஆதாரங்கள் இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து, அவற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு, தடையின்றி குடிநீர் வழங்கிட அரசுத்துறை அலுவலர்கள் முன்வர வேண்டும். இப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்திட வேண்டும். மேலும், ஏற்கனவே பயன்படுத்தி வருகின்ற நீர் ஆதாரங்களை மேலும் செம்மைப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, அதிக அளவில் நீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் துறை அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

ரூ.22¾ கோடியில் குடிநீர் பணிகள்

மக்களின் அடிப்படை தேவைகளில் மிக, மிக முக்கிய தேவையாக கருதப்படுவது குடிநீர் தேவையாகும். இக்குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்கு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் பல்வேறு குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நகராட்சி பகுதியில் ரூ.2 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் 88 குடிநீர் பணிகளும், பேரூராட்சி பகுதியில் ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் 72 குடிநீர் பணிகளும், ஊரகப் பகுதிகளில் ரூ.16 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 713 குடிநீர் பணிகளும் என மொத்தம் ரூ.20 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் 873 குடிநீர் பணிகள் எடுக்கப்பட்டு, பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்கு ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் ஏறத்தாழ 17 குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக தற்பொழுது ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்கிட மாநில பேரிடர் மேலாண்மை நிதி, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி ஆதாரங்களை கொண்டு, சுமார் ரூ.22 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 890 குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டும், சில பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் சரோஜா

இக்கூட்டத்தில் அமைச்சர் சரோஜா பேசியதாவது:–

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணமாக தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வழங்குவதற்கும், சற்று சிரமம் ஏற்பட்டு உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்குவதற்கு துறை அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றிட முடியும். இத்தகைய வறட்சியான சூழ்நிலையில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் (சேலம்) லட்சுமி, உதவி கலெக்டர்கள் ராஜசேகரன், கீர்த்தி பிரியதர்சினி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்திரசேகர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story