ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 30 பேருக்கு தீவிர சிகிச்சை
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சலின் தாக்கம் இருந்தது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சலின் தாக்கம் இருந்தது. இதையடுத்து சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு அந்த காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியில் மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். மேலும் சிலர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சாந்தி (வயது 51) என்பவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சாந்தி என்ற பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம். பல கிராமங்களில் மர்ம காய்ச்சலின் தாக்கம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த ஊர்களில் சுகாதார முகாம் அமைக்கப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் ஆஸ்பத்திரிக்கள், ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். கடந்த ஒரு வாரமாக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் சுமார் 30–க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.