டெல்லியில் நடைபெறும் விவாசாயிகளின் போராட்டத்தை முடிவுக் கொண்டுவர முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கடலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி


டெல்லியில் நடைபெறும் விவாசாயிகளின் போராட்டத்தை முடிவுக் கொண்டுவர முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கடலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 16 April 2017 5:00 AM IST (Updated: 15 April 2017 10:13 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக் கொண்டுவர தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடலூர்,

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை(இன்று) காலை 10 மணிக்கு நடக்கிறது. விவசாயிகளின் பிரச்சினையை முன்வைத்து நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான் கலந்துகொள்கிறேன். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.

தமிழகம் முழுவதும் விவசாயிகளும், விவசாய சங்கத்தின் பிரதிநிதிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. பிரதமரும் விவசாயிகளை சந்திக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. அவர் விவசாயிகளை அழைத்து பேச வேண்டும்.

தமிழக முதல்–அமைச்சர்

தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. தலைவர்கள், மத்திய மந்திரி ஆகியோர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமரிடம் அழைத்து சென்று இருக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு மனது இல்லையோ அல்லது மத்தியில் போதுமான செல்வாக்கு இல்லையோ என தெரியவில்லை. தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அழைத்து பிரதமரை சந்தித்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அப்போது முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை மட்டும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுபடி பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் வங்கி கடன் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். வறட்சி மற்றும் கடன் பிரச்சினையால் இறந்துபோன அனைத்து விவசாயிகளும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லை. காசு கொடுத்துதான் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீருக்காக கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்.

பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு தொல்லை கொடுத்து அங்கு ஆட்சி செய்ய பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாராயணசாமி முதல்–அமைச்சராக இருக்கிறார். இங்கு காங்கிரஸ் அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் கருவியாக கவர்னர் கிரண்பெடி பயன்படுத்தப்படுகிறார். அவர் அந்த மாநில அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும், உபத்திரவமாக இருக்க கூடாது. மத்திய–மாநில அரசுக்கு பாலமாக இருக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மஞ்சக்குப்பம் டவுன்ஹால் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், நகர தலைவர் குமார், தொழில் அதிபர் மணிரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story