டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விழுப்புரத்தில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விழுப்புரத்தில் இளைஞர்கs; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக தமிழக விவசாயிகள் தொடர்ந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் சமூக நல அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்இந்த நிலையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை யாதும் ஊரே யாவரும் கேளீர் பொது நலச்சங்கம், புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, கரிகால சோழன் பசுமை மீட்பு படை ஆகிய அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு யாதும் ஊரே, யாவரும் கேளீர் சங்க தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் செங்குட்டுவன் கண்டன உரையாற்றினார். இதில் துணை செயலாளர் சக்தி, கரிகால சோழன் பசுமை மீட்பு படை தலைவர் அகிலன், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாவட்ட பொதுச்செயலாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் சுபாஷ், சுரேஷ், பெருமாள், கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.